×

ஈரான், காசா விவகாரத்தில் மோடி அரசின் மவுனத்திற்கு சோனியா காந்தி கண்டனம்: இனியாவது குரல் எழுப்ப வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘ஈரான், காசா விவகாரத்தில் இந்தியா மவுனம் காப்பது, குரல் இழப்பு மட்டுமல்ல, விழுமியங்களின் சரணாகதியும் கூட’ என காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈரான், காசாவில் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆங்கில பத்திரிகைக்கு எழுதிய ‘இந்தியாவின் குரலை கேட்க இப்போதுகூட தாமதமாகவில்லை’ கட்டுரையில் கூறியிருப்பதாவது:
இஸ்ரேலுடன், சுதந்திரமான பாலஸ்தீனத்தை உள்ளடக்கிய அமைதியான இரு தேசத் தீர்மானத்திற்கான இந்தியாவின் நீண்டகால மற்றும் கொள்கை ரீதியான உறுதிப்பாட்டை மோடி அரசு கைவிட்டு விட்டது. காசாவில் ஏற்பட்ட பேரழிவு மற்றும் ஈரானுக்கு எதிரான தாக்குதல் குறித்து ஒன்றிய அரசின் மவுனம் நமது தார்மீக மற்றும் ராஜதந்திர மரபுகளிலிருந்து திடுக்கிடும் விலகலை பிரதிபலிக்கிறது. இது குரல் இழப்பு மட்டுமல்ல, விழுமியங்களின் சரணாகதியையும் குறிக்கிறது.

ஈரான் மண்ணில் நடக்கும் குண்டுவெடிப்புகள் படுகொலைகள் கடுமையான பிராந்திய மற்றும் உலகளாவிய விளைவுகளை கொண்ட ஆபத்தான விரிவாக்கத்தை குறிக்கிறது. இதை காங்கிரஸ் கட்சி, தாக்குதலின் முதல் நாளிலேயே கண்டித்துள்ளது. ஈரான் இந்தியாவின் நீண்டகால நண்பர். எனவே, இப்போது கூட ஒன்றும் தாமதமாகி விடவில்லை. இந்த விவகாரத்தில் இந்தியா தெளிவாக பேச வேண்டும். பொறுப்புடன் செயல்பட வேண்டும். மேற்கு ஆசியாவில் பதற்றங்களை தணிக்கவும், பேச்சுவார்த்தையை மீட்கவும் இருக்கின்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.

The post ஈரான், காசா விவகாரத்தில் மோடி அரசின் மவுனத்திற்கு சோனியா காந்தி கண்டனம்: இனியாவது குரல் எழுப்ப வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sonia Gandhi ,Modi government ,Iran ,Gaza ,NEW DELHI ,INDIA ,CONGRESSIONAL PARLIAMENTARY PARTY ,Gaza, Iran ,Iran, ,Dinakaran ,
× RELATED மசோதாவின் பெயரை படிப்பதே எனக்கு விரக்தியை உண்டாக்குகிறது: கனிமொழி எம்.பி!