×

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடிப்பு : விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 20ம் தேதி வரை நீட்டித்தது ஒன்றிய அரசு!!

இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்கு மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக மீண்டும் ஆலோசனை நடத்தி இருந்த நிலையில், மீண்டும் வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்ற மணிப்பூரில் மெய்தி இன மக்களுக்கும் குக்கி இன மக்களுக்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.ஆயிரக்கணக்கனோர் வீடுகளை இழந்தனர். நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், வேறு வழியின்றி, பாஜகவைச் சேர்ந்த பைரன் சிங் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.

இந்த நிலையில், சூரசந்த்ப்பூர் மாவட்டத்தின் எல்லையை ஒட்டி உள்ள பகுதிகளுக்கு அருகில் மர்ம நபர்கள் பல சுற்றுகளாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். வன்முறை நிகழ்ந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர், ஒரு பிரிவினர் முகாம்களில் இருந்து தங்களது வீடுகளுக்கு திரும்பிய மறுநாள் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதனை தடுக்க முற்பட்ட போது, பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிலர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மணிப்பூரில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் விதமாக டெல்லியில் ஆலோசனை நடத்திய 2 நாட்களில் இந்த வன்முறை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே மணிப்பூர் வன்முறை தொடர்பான விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20 மே 2026க்குள் அறிக்கை தர வேண்டும் என்று விசாரணை ஆணையத்துக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. முன்னதாக ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் லம்பா தலைமையில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரிக்க 2023ல் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையத்துக்கு இதுவரை 4 முறை கால அவகாசத்தை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : outbreak ,Manipur ,Commission of Inquiry ,EU Government ,Imphal ,BJP ,MAIDI ETHNIC POPULATION ,KUKI ETHNIC GROUP ,BHAJA-RULED ,
× RELATED மின்சாரம் வாழ்க்கையின் ஒரு...