×

சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற லைசென்ஸ் தரும் திருத்த அரசாணையில் சட்டவிரோதம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு

சென்னை: சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற லைசென்ஸ் வழங்க வகை செய்யும் திருத்த அரசாணையில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனவும், பொதுநலனுக்கு எதிரானதும் இல்லை எனவும் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு சிறப்பு உரிமத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பின்னர், பொது இடங்களான திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாற வகை செய்யும் விதிகள் ரத்து செய்யப்பட்டு சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்குவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழக உள்துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலாளர் சார்பில் மதுவிலக்கு துறை ஆணையர் ரத்னா பதில்மனு தாக்கல் செய்துள்ளார். அதில், திருமணம் போன்ற நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற வகை செய்யும் பிரிவுகள் நீக்கப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுபான விற்பனை விதிகளின்படியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியும் தான் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற ஒன்று அல்லது சில நாட்களுக்கு மட்டும் உரிமம் வழங்கப்படும்.

கல்வி நிறுவனங்களுக்கு அருகில் நடக்கும் நிகழ்வுகளுக்கு உரிமம் வழங்கப்படாது. பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே உரிமங்கள் வழங்கப்படுகிறது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், வருவாய் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டு இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு தவறானது. மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ள 4 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இவ்வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசின் பதில்மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு வழக்கின் விசாரணையை ஜூலை 5ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதுவரை ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.

The post சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற லைசென்ஸ் தரும் திருத்த அரசாணையில் சட்டவிரோதம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Court ,Chennai ,High Court ,
× RELATED உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது...