×

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை மாநகர காவல்துறையில் மூத்த குடிமக்களுக்கு உதவ ‘பந்தம்’ திட்டம் அறிமுகம்: குற்றங்களை தடுக்க 3 புதிய செயலிகள்; டிஜிபி சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்

சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை மாநகர காவல்துறையில் மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காக ‘பந்தம்’ திட்டம் மற்றும் குற்றங்களை தடுக்க 3 புதிய செயலிகளை டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சென்னை மாநகரில் குற்றங்களை குறைப்பதற்கும், குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க ‘பருந்து மற்றும் ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு மற்றும் நிவாரணம்’ என 3 புதிய செயலிகளின் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘பந்தம்’ என்ற புதிய திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த திட்டத்தை தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் மாநகர காவல்துறை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க், சுதாகர், செந்தில்குமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நவீனப்படுத்தப்பட்ட பருந்து செயலி: சென்னை மாநகர காவல் எல்லையில் 104 காவல் நிலையங்கள் உள்ளது. அனைத்து காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சாதாரண குற்றவாளிகளின் விவரங்களை பதிவு செய்யும் வசதி, 24 மணி நேரமும் குற்றவாளிகளை கண்காணிக்கும் தளமாக ‘பருந்து செயலி’ உள்ளது. இந்த செயலி ரூ.25 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் வைக்கப்படும் போதும், ஜாமீன் மனு தாக்கல் செய்யும் போதும், ஜாமீன் வழங்கப்படும்போதும், சிறையிலிருந்து விடுவிக்கப்படும் போதும் உடனடியாக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்தியை இந்த செயலி அனுப்பும். இதனால் குற்றவாளிகளின் தொடர்புடைய வழக்குகளை விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு செயலி: சென்னை மற்றும் இதர இடங்களில் காணாமல் போன மற்றும் திருடுபோன வாகனங்களை கண்டுபிடிக்கவும், திருட்டு வாகனங்களை செயின், செல்போன் பறிப்பு மற்றும் கொள்ளையில் குற்றவாளிகள் பயன்படுத்துவதை தடுக்க மாநகர காவல்துறை சார்பில் ரூ.1.81 கோடி செலவில் ‘ஒருங்கிணைந்த வாகன் கண்காணிப்பு அமைப்பு’ என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களை பாதுகாக்கும் ‘பந்தம்’: சென்னையில் வசிக்கும் 75 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வசிக்கும் பிள்ளைகளால் தனித்து வாழும் முதிவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ‘பந்தம்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் மூத்த குடிமக்களின் விபரங்களை காவல்துறையினர் பதிவேற்றம் செய்து, அவர்களுக்கு மருத்தவ உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்ய ஏதுவாக இருக்கும். மேலும், அவசர தேவைகளுக்கு மூத்த குடிமக்கள் காவல்துறையின் கட்டணமில்லா 9499957575 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.

நிவாரண செயலி: சென்னை காவல்துறையில் காவல் நிலையங்கள், காவல் அதிகாரிகள், இணையதளம் மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்களை ஒருங்கிணைத்து அவற்றை கண்காணிக்கவும், விசாரணை முறைகள், நடவடிக்கைகள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து பொதுமக்கள் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் ‘நிவாரண செயலி’ தொடங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எஸ்எம்எஸ் அளிக்கப்படும். இந்த செயலி அமெரிக்கா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிபி சங்கர் ஜிவால் பேசுையில், ‘‘இன்னும் சென்னையின் பாதுகாப்புக்காக 2 அல்லது 3 புதிய திட்டங்கள் வர உள்ளது’’ என்றார்.

The post இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை மாநகர காவல்துறையில் மூத்த குடிமக்களுக்கு உதவ ‘பந்தம்’ திட்டம் அறிமுகம்: குற்றங்களை தடுக்க 3 புதிய செயலிகள்; டிஜிபி சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : India ,Chennai Metropolitan Police ,DGP ,Shankar Jiwal ,CHENNAI ,Municipal Police Commissioner ,Sandeep Rai Rathore ,
× RELATED சென்னையில் உள்ள காவல் நிலையங்களில்...