×

இந்தியா – வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை

சென்னை: இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள வங்கதேச அணி முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் சென்னையில் இன்று தொடங்கும் நிலையில், 2வது டெஸ்ட் கான்பூரில் செப்.27ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் (அக்.6, 9, 12) முறையே குவாலியர், டெல்லி, ஐதராபாத்தில் மோத உள்ளன.

பாகிஸ்தானை முதல் முறையாக டெஸ்ட் தொடரில் வீழ்த்தி ‘ஒயிட்வாஷ்’ சாதனை படைத்த கையோடு இந்தியா வந்துள்ளதால், வங்கதேச அணி மிகுந்த உற்சாகத்துடன் களமிறங்குகிறது. கேப்டன் ஷான்டோ, அனுபவ வீரர் ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரகிம், லிட்டன் தாஸ், ஆல் ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறார்கள். அதே சமயம், புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் – கேப்டன் ரோகித் சர்மா கூட்டணி வெற்றி முனைப்புடன் வரிந்துகட்டுகிறது. சொந்த மண்ணில் விளையாடுவதும், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் இந்திய அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். மூன்று வேகம் அல்லது 3 சுழல் என வியூகம் வகுப்பதில் கம்பீர், ரோகித் முடிவு என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரு அணிகளுமே தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் களமிறங்குவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.
* இரு அணிகளும் முதல் முறையாக மோதிய டெஸ்டில் (நவம்பர் 2000, டாகா) இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
* இதுவரை 13 டெஸ்டில் மோதியுள்ளதில், இந்தியா 11ல் வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது (2 டெஸ்ட் டிரா).
* கடைசியாக 2022 டிசம்பரில் வங்கதேசத்தில் நடந்த டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், துருவ் ஜுரெல், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்கள்), ஆர்.அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல், விராத் கோஹ்லி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், சர்பராஸ் கான், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், யாஷ் தயாள்.
வங்கதேசம்: நஜ்மல் உசைன் ஷான்டோ (கேப்டன்), ஷாகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ் (ஆல் ரவுண்டர்கள்), மஹமதுல் ஹசன் ஜாய், மோமினுல் ஹக், ஷத்மன் இஸ்லாம், முஷ்பிகுர் ரகீம், லிட்டன் தாஸ், ஜாகர் அலி, ஜாகிர் ஹசன், ஹசன் மஹமத், கலீல் அகமது, நஹித் ராணா, நயீம் ஹசன், தைஜுல் இஸ்லாம், தஸ்கின் அகமது.

* இந்திய அணியின் பெருமை பும்ரா…
சர்வதேச விளையாட்டு போட்டிகள் வீரர்களை உருவாக்குவதற்கான களங்கள் அல்ல. உள்நாட்டு போட்டிகளில் இருந்தே சிறந்த வீரர்களை வளர்த்தெடுக்க முடியும். இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா, அக்சர் என தரமான ஆல் ரவுண்டர்கள் இருக்கின்றனர். அதிலும் அஷ்வின், ஜடேஜா போன்றோர் கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். அதேபோல் பும்ரா மூன்று வகையான போட்டிகளிலும் உலகின் சிறந்த பந்துவீச்சாளராக விளங்குகிறார். அவர் நமது அணியில் இடம் பெற்று இருப்பது பெருமைக்குரிய விஷயம். ஸ்பின்னர்கள் மட்டுமின்றி, கபில்தேவைப் போன்று வேகப் பந்துவீச்சாளர்களும் ஆல் ரவுண்டர்களாக உருவானால் நமது பலம் கூடும். இருப்பினும், பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு சிறப்பாக இருப்பதால் நாம் அதை கடந்து செல்ல முடிகிறது. காயத்திலிருந்து மீண்டு வரும் சீனியர் வீரர்களுக்கு இளைய வீரர்கள் வழிவிட வேண்டும். யாரையும் எந்த வீரரையும் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. நம்மிடம் சிறந்த இளம் மற்றும் அனுபவ வீரர்கள் இருக்கிறார்கள். இன்னும் நிறைய போட்டிகள் இருக்கின்றன. எப்படி இருந்தாலும்… ஆகச் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்வது தான் எங்கள் இலக்கு. அதில் தான் எங்கள் கவனமும் இருக்கும். – இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்

The post இந்தியா – வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : India ,Bangladesh ,Chepauk ,Chennai ,MA Chidambaram Stadium ,Chepakkam, Chennai ,Dinakaran ,
× RELATED இந்தியா- பங்களாதேஷ் டெஸ்ட்: 10,371 ரசிகர்கள் போட்டியை காண வருகை