×

வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக கே.எஸ்.கே.எனர்ஜி, ரெபக்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை: முக்கிய ஆவணங்கள், லேப்டாப், மின்னணு சாதனங்கள் பறிமுதல்

சென்னை: கே.எஸ்.கே.எனர்ஜி நிறுவனம் மற்றும் ரெபக்ஸ் நிறுவனம் தொடர்பான அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் நேற்று இரவு வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு கே.எஸ்.கே. எனர்ஜி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சென்னை செம்மஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. அதேபோல், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அனில் அகர்வால் என்பவருக்கு சொந்தமான ரெபக்ஸ் என்ற நிறுவனமும் இயங்கி வருகிறது.

இந்த ரெபக்ஸ் நிறுவனம் தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு 100 மற்றும் 50 லிட்டர் காஸ் சிலிண்டர் சப்ளை செய்து வருகிறது. இதனால் அதிகளவில் காஸ் சிலிண்டர்களை இந்த நிறுவனம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்ததாக கூறப்படுகிறது. மேலும், ரெபக்ஸ் நிறுவனம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கே.எஸ்.கே.நிறுவனத்துடன் நெருங்கிய வர்த்தகம் செய்து வருவதாக கூறப்படுகிறது. எனவே இந்த 2 நிறுவனங்களும் கடந்த நிதியாண்டில் வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த இயந்திரங்கள் மற்றும் காஸ் சிலிண்டர்களுக்கு முறையான கணக்கு காட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து கே.எஸ்.கே. எனர்ஜி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான ரெப்கஸ் நிறுவனங்களுக்கு தொடர்புடைய அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் உரிமையாளர்கள் வீடுகளில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக, சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ரெபக்ஸ் நிறுவனத்தின் தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள தலைமை அலுவலகம், திருப்போரூரை அடுத்த தண்டலம் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள தொழிற்சாலை ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.

தண்டலம் கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் சோதனைக்கு நேற்று காலை 2 கார்களில் 8 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். பிறகு தொழிற்சாலையின் நுழைவாயில் கதவுகள் மூடப்பட்டது. ஊழியர்கள், அதிகாரிகள் யாரையும் வெளியே விடவில்லை. அதேபோல் வெளியில் இருந்து தொழிற்சாலைக்கு வந்த ஊழியர்களை உள்ளே விடவில்லை. பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர்.

அதேபோல் கே.எஸ்.கே. எனர்ஜி நிறுவனம் தொடர்பான இடங்களிலும் சோதனை நடந்தது. நள்ளிரவு வரை நீடித்த சோதனையில் கணினி, லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், வெளிநாட்டு முதலீடுகள் பல கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. முழுமையான சோதனைக்கு பிறகே எத்தனை கோடி வரிஏய்ப்பு செய்யப்பட்டது என்பது தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக கே.எஸ்.கே.எனர்ஜி, ரெபக்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை: முக்கிய ஆவணங்கள், லேப்டாப், மின்னணு சாதனங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : KSK Energy ,Refex ,CHENNAI ,KSK Energy Company ,Repex Company ,KSK ,Hyderabad, Telangana ,Repux ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...