ஓசூர்: ஓசூரில் விமான நிலையம் அமைக்க வசதியாக 5 இடங்களை தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் சிறிய ஆணி முதல் விமானம் உதிரி பாகங்கள் வரை தயாரிக்கப்படுகிறது. மேலும், கைக்கடிகாரம் மற்றும் தங்க நகைகள், இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் என பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், ஓசூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ரயில் மற்றும் விமான சேவைகள் இல்லாத பகுதியாகவே உள்ளது. இங்குள்ள தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கும், கர்நாடக மாநிலம் பெங்களூரை போன்று வளர்ச்சியடையவும், மாநிலத்தின் தலைநகருடன் இணைந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து, இந்திய விமான நிலைய ஆணையம், ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதற்காக முன்மொழியப்பட்டவாறு, ஓசூரை சுற்றி ஐந்து இடங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஓசூரில் இயங்கி வரும் தனியார் விமான ஓடுதளத்திற்கு தெற்கு பகுதியில் 2 கி.மீ., தொலைவில் உள்ள தோகரை அக்ரஹாரம், தென்கிழக்கே 27 கி.மீ., தொலைவில் உள்ள உலகம், 16 கி.மீ., தொலைவில் உள்ள தாசேப்பள்ளி உள்ளிட்ட இடங்களை ஏஏஐ குழு, 2 மாதங்களுக்கு முன்பு பார்வையிட்டதாகவும், ஒவ்வொரு தளத்தின் சிறப்பம்சங்கள் குறித்த ஆய்வறிக்கையை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மற்றும் ஏஏஐ இடையே, விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும். ஐந்தில் இருந்து இரண்டு இடங்கள் பட்டியலிடப்படும், இதையடுத்து, அந்த இரண்டு தளங்களையும் ஏஏஐ ஆராயும். இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், விரைவில் இடம் தேர்வு செய்யப்படவுள்ளது. மற்றொரு முக்கியமான பிரச்னையாக ஓசூர் பகுதியில் வரும் வான்வெளி இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிட்., கட்டுப்பாட்டில் இருப்பதால், பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி பெறுவதும் கட்டாயம் என தெரியவருகிறது. அதிக முதலீடுகள் வருவற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால், அதற்கான நடவடிக்கையை தமிழக முதல்வர் தீவிரப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ஓசூரில் விமான நிலையம் அமைக்க 5 இடம் தேர்வு: விரைவில் இறுதியாகும் என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.