×
Saravana Stores

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தபோது தாறுமாறாக ஓடிய வேன் கவிழ்ந்ததில் அம்பத்தூரை சேர்ந்த 15 பேர் படுகாயம்: கிருஷ்ணகிரியில் இன்று அதிகாலை பரபரப்பு

கிருஷ்ணகிரி: சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீத் (54). இவர், தனது உறவினர்களான 13 பெண்கள் உள்பட 20 பேருடன் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்றிரவு வேனில் சுற்றுலா சென்றனர். சென்னை பெருங்குளத்தூர் பகுதியை சேர்ந்த கரீம் உல்லா (48) என்பவர், வேனை ஓட்டினார். இன்று அதிகாலை திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வந்தபோது வேன் தாறுமாறாக சென்றது. இதனால் வேனில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே டிரைவரிடம், ‘டீ குடித்துவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்லலாம்’ என கூறியுள்ளனர். அதற்கு அவர், ‘கிருஷ்ணகிரிக்கு சென்று டீ குடிக்கலாம்’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் காலை 6 மணியளவில் வேன் சென்னை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ் சாலையில் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி அருகே வந்தபோது திடீரென தாறுமாறாக ஓடி சென்டர் மீடியனில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்தவர்கள் அலறி துடித்தனர். இதை பார்த்ததும் அவ்வழியாக சென்றவர்கள் கந்திகுப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 15 பேரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தபோது தாறுமாறாக ஓடிய வேன் கவிழ்ந்ததில் அம்பத்தூரை சேர்ந்த 15 பேர் படுகாயம்: கிருஷ்ணகிரியில் இன்று அதிகாலை பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Ambattur ,Okanagan ,Sakul Hameed ,Chennai ,Dharmapuri district ,Okenakal ,Karim Ullah ,Perungulathur ,
× RELATED ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி: அருவியில் குளிக்க தடை