×

தனது கதையை திருடி ‘ஹிட் 3’ எடுத்ததாக திரைப்பட கதாசிரியர் வழக்கு: தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தனது கதையை திருடி ‘‘ஹிட்3” திரைப்படம் தயாரித்துள்ளதாக விமல் என்பவர் தொடர்ந்த வழக்கில் நடிகர் நானி, இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த கே.விமல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2022ம் ஆண்டு தனது ‘‘ஏஜென்ட் 11” என்ற கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்தேன்.

சைக்கோ கில்லர் கதையை மையமாக வைத்து திரைப்படமாக எடுக்க பிரபல நடிகர் நானியின் நிறுவனத்துக்கு 2022ம் ஆண்டு கதையை ஈமெயில் மூலம் அனுப்பினேன். பின்னர், அதே ஆண்டு கதையை ‘‘ஏஜென்ட் வி” என்ற பெயரில் நாவலாகவும் வெளியிட்டேன். இந்நிலையில், இயக்குநர் சைலேஷ் கொலனு, நடிகர் நானியை நாயகனாக வைத்து ‘‘ஹிட்3” என்ற சைக்கோ கில்லர் கதையை மையமாக வைத்து திரைப்படம் எடுக்க இருப்பதாக 2022ம் ஆண்டு அறிவித்தார். இந்நிலையில், ஹிட் 3 திரைப்படம் 2025 மே மாதம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியானது. திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வருமானம் 100 கோடியை எட்டியுள்ளது. முதல் நாள் காட்சி மூலம் 43 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்திலும் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

என்னுடைய கதையை மையமாக வைத்து ஹிட் 3 திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன். எனவே, எனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும். திரைப்படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் 20 சதவிதிதத்தை இழப்பீடாக வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஹிட் 3 படத்தின் நாயகன் நானி, இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நெட்பிளிக்‌ஸ் நிறுவனம் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post தனது கதையை திருடி ‘ஹிட் 3’ எடுத்ததாக திரைப்பட கதாசிரியர் வழக்கு: தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,Chennai High Court ,Nani ,Netflix ,Vimal ,K. ,Sankarankovaya ,Tenkasi District ,Wimal ,High Court ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!