×

துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகள்; குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: வரும் 15ம் தேதி முதல்நிலை தேர்வு


சென்னை: துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட 70 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு வருகிற 15ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் குரூப் 1, குரூப் 2, 2 ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு உரிய அறிவிப்புகளை வெளியிட்டு போட்டி தேர்வு நடத்தி வருகிறது. அந்த வகையில், குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 1ம் தேதி வெளியிட்டது. அதில் துணை கலெக்டர் 28 இடங்கள், போலீஸ் டிஎஸ்பி 7 இடம், வணிகவரி உதவி ஆணையர் 19, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் 7, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 3, தொழிலாளர் நல உதவி ஆணையர் 6 ஆகிய 70 பணியிடங்கள் அடங்கும்.

அதோடு உதவி வனப் பாதுகாவலர் 2 காலியிடங்களுக்கான குருப் 1 ஏ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அறிவிப்பு வெளியானது முதல் தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. தொடர்ந்து ஏப்ரல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த தேர்வுக்கு இளங்கலை, முதுநிலை பட்டதாரிகள் என போட்டி போட்டு விண்ணப்பித்துள்ளனர். சுமார் 2 லட்சம் ேபர் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. குரூப் 1, குரூப் 1ஏ பதவிக்கான முதல்நிலை தேர்வு வருகிற 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் குரூப் 1, குரூப் 1ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக டின்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கையின்படி குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான பொதுவான முதல்நிலை தேர்வு வருகிற 15ம் தேதி முற்பகல் நடைபெற உள்ளது. தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு தளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகள்; குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: வரும் 15ம் தேதி முதல்நிலை தேர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,DSP ,TNPSC ,Tamil Nadu Public Service Commission ,Dinakaran ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...