×

குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வுக்கு டிசம்பரில் ரிசல்ட்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


சென்னை: 2327 பதவிக்கு 5.81 லட்சம் பேர் எழுதிய குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வுக்கு வரும் டிசம்பர் மாதம் ரிசல்ட் வெளியிடப்படும் என்றும், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மெயின் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி நேற்று அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பணியில் 507 இடங்கள், குரூப் 2ஏ பணியில் 1820 பணியிடங்கள் என மொத்தம் 2327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வெளியிட்டது. தொடர்ந்து முதல்நிலை தேர்வு கடந்த 14ம் தேதி நடந்தது. இத் தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதினர். தொடர்ந்து கடந்த 23ம் தேதி உத்தேச விடைத்தாள் வெளியிடப்பட்டன.

உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகள் ஆகியவற்றை இணைய வழி வாயிலாக வருகிற 30ம் தேதி மாலை 5.45 மணி வரை தெரிவிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இந்நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வு ரிசல்ட் மற்றும் மெயின் தேர்வு குறித்து டிஎன்பிஎஸ்சி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில், ‘‘குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் டிசம்பர் மாதம் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மெயின் தேர்வு நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகளுக்கான (நேர்முகத் தேர்வு பதவிகள்) முடிவுகள் உத்தேசமாக நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

The post குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வுக்கு டிசம்பரில் ரிசல்ட்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,CHENNAI ,Tamil Nadu Government… ,Dinakaran ,
× RELATED குரூப்2, குரூப் 2ஏ தேர்வு மெயின் தேர்வு...