×

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட்டது தவறு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி: அதிருப்தி எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவிக்காதபோது, அதன் அடிப்படையில் உத்தவ் தாக்கரே அரசை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டது தவறு என்று சிவசேனா வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து, மகா விகாஸ் அகாடி கூட்டணி உருவாக்கி ஆட்சி அமைத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வரானார். கடந்த ஆண்டு சட்ட மேலவைத் தேர்தல் நடந்த கையோடு, உத்தவ் அரசில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பிரிந்து சென்றார். இதனால் கடந்த ஜூன் மாதம் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். இதையடுத்து உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே, பாஜவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்து முதல்வராகியுள்ளார். தேவேந்திர பட்நவிஸ் துணை முதல்வரானார்.

இந்தநிலையில் எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை, சபாநாயகர் நியமனம், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஷிண்டே தரப்பை ஆட்சி அமைக்க அழைத்தது, ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சி மற்றும் வில் அம்பு சின்னம் ஆகியவற்றை ஒப்படைத்தது தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகள் குறித்து விசாரணை நடத்திய அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் , நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி, ஹீமா கோலி மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது. 141 பக்க தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

* கவர்னர் அரசியலில் ஈடுபடக் கூடாது. அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே அணி கோரிக்கையின் அடிப்படையில், அப்போதைய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியுள்ளார். ஒரு அரசியல் கட்சிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளுக்கு அரசியலமைப்புக்கு உட்பட்டு அல்லது கட்சி தேர்ந்தெடுக்கும் வேறு எந்த முறைகளின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும்.
* ஒரு கட்சி ஒரு அரசை ஆதரிக்காததற்கும், ஒரு கட்சிக்குள் உள்ள நபர்கள் தங்கள் கட்சித் தலைமை மற்றும் செயல்பாடுகள் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கவர்னர் உத்தரவிடுவதற்கான காரணமாக இது இருக்க முடியாது.
* மேலும் கவர்னர் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பாக அரசியலமைப்பு நிர்ணயித்துள்ள வரம்புகளை அறிந்திருக்க வேண்டும். அரசியல் சாசனம் அல்லது அதன் கீழ் உருவாக்கப்பட்ட சட்டத்தால் தனக்கு வழங்கப்படாத அதிகாரத்தை ஆளுநர் பயன்படுத்த முடியாது.
* உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மை இழந்தது என கவர்னர் முடிவு செய்தது தவறு. மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசில் அங்கம் வகிக்க விரும்பவில்லை என அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எழுதிய கடிதத்தை அரசுக்கு தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. எந்த தகவல்களின் அடிப்படையில் கவர்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர முடிவு செய்தாரோ, அந்த தகவலில், சிவசேனாவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ள விரும்புவதாக குறிப்பிடப்படவில்லை. எனவே, சிவசேனா சட்டமன்ற கட்சி எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினர் கையெழுத்திட்ட தீர்மானத்தை நம்பி முதல்வர் சபையின் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டார் என்ற முடிவுக்கு கவர்னர் வந்ததும், பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரியதும் தவறாகும்.
*மகாராஷ்டிராவில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளில் பாஜ அதிகபட்ச எண்ணிக்கையாக 106 எம்எல்ஏக்கள் கொண்டிருந்தது. இதனால் இது பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. கடந்த 2022 ஜூன் 30ம் தேதி அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்நவிஸ், ஷிண்டே ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பதாக கவர்னருக்கு கடிதம் அனுப்பினார். அதே நாளில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஷிண்டே கடிதம் எழுதினார். இதன்மூலம், ஷிண்டே ஆட்சியமைச்க அழைப்பு விடுத்ததை கவர்னர் நியாயப்படுத்தியுள்ளார்.
*அரசியல் கட்சியும், சட்டமன்றக் கட்சியும் ஒன்றல்ல; கொறடாவை நியமிக்க சட்டமன்ற கட்சிக்கு உரிமை கிடையாது. எனவே, சிவசேனாவின் தலைமை கொறடாவாக கோகவாலேவை நியமித்த சபாநாயகரின் முடிவு சட்டவிரோதமானது. ஏக்நாத் ஷிண்டே அணியின் ஆதரவின்பேரில் கோகவாலேயை கொறடாவாக நியமனம் செய்ததற்கு சபாநாயகர் எடுத்த முடிவு என்பது சட்ட விரோதம். ஒரு அரசியல் கட்சியால் நியமிக்கப்படும் கொறடாவை மட்டுமே சபாநாயகர் அங்கீகரிக்க முடியும்.
* தகுதி நீக்க மனு மற்றும் தேர்தல் ஆணையம் எது உண்மையான அரசியல் கட்சி என்பதை சபாநாயகர் ஒரே நேரத்தில் முடிவு செய்யலாம் கட்சித்தாவல் மற்றும் உண்மையான அரசியல் கட்சி யார் என்பது குறித்த உரிமை கோரிக்கைகள் மீது தங்கள் முன் உள்ள மனுக்கள் மீது ஒரே நேரத்தில் தீர்ப்பளிக்க சபாநாயகருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் அதிகாரம் உள்ளது.
* தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் பங்கேற்கலாம். தகுதி நீக்கம் தொடர்பான மனுக்கள் நிலுவையில் இருந்தாலும், அவை நடவடிக்கைகளில் பங்கேற்க, எம்.எல்.ஏ.,வுக்கு உரிமை உண்டு.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்து உள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் சபாநாயகர், ஆளுநர் ஆகியோர் நடவடிக்கைகள் சட்டவிரோதமாக இருந்த போதும் உத்தவ் தாக்கரே ராஜினாமா என்ற முடிவை எடுத்ததால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு தப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜினாமா செய்யாவிட்டால் உத்தவ் மீண்டும் முதல்வர்: உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில்,’சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தவ் தாக்கரேவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தது நியாயமானதல்ல என்றாலும், மனுதாரர்கள் (உத்தவ் தரப்பு) கோரியபடி முந்தைய நிலையை மீட்டெடுக்க முடியாது. உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல், பதவியை ராஜினாமா செய்ததே இதற்கு காரணம். தாமாக முன்வந்து தாக்கல் செய்யப்பட்ட ராஜினாமாவை இந்த நீதிமன்றம் ரத்து செய்ய முடியாது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதை தாக்கரே தவிர்த்திருந்தால், அவரது தலைமையிலான அரசை மீண்டும் அமைப்பதற்கான நிவாரணத்தை வழங்குவது குறித்து இந்த நீதிமன்றம் பரிசீலித்திருக்கும்’ என்று தெரிவித்து உள்ளது.

சபாநாயகர் அதிகாரம் 7 நீதிபதிகள் விசாரணை: உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: சபாநாயகரின் அதிகாரங்கள் குறித்த நபம் ரெபியாவின் தீர்ப்பை, கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் மறுபரிசீலனை செய்ய வேண்டும். எனவே, சபாநாயகரை நீக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து முடிவெடுக்க முடியாத நிலை உள்ளதா என்பது குறித்து 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரணை நடத்தும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

The post மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட்டது தவறு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Shiv Sena ,Supreme Court ,New Delhi ,Uddhav Thackeray government ,
× RELATED பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...