×

உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த தன்கரை சந்தித்தார் கவர்னர் ஆர்.என்.ரவி


புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்த துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை டெல்லியில் நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டு வைத்ததற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்த 10 மசோதாக்களுக்கு அனுமதி அளித்ததுடன், ஆளுநர் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு குறித்து பேசிய துணைஜனாதிபதி ஜெகதீப் தன்கர், நீதிபதிகள் சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். அதோடு, ஜனாதிபதிக்கு நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது எனவும் தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசினார். தமிழ்நாடு ஆளுநர் மீதான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, ஜெகதீப் தன்கர் எதிர்கருத்து தெரிவித்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

இந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. தன்கருடான சந்திப்பை தொடர்ந்து, ஒன்றிய சட்டத்துறை அதிகாரிகளுடன் கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்து ஆலோசனை மேற்கொள்வார் என்று தெரிகிறது. துணை ஜனாதிபதி தன்கர், மேற்கு வங்க மாநில கவர்னராக இருந்தவர். ஆளுநர், ஜனாதிபதி அதிகாரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படும் நிலையில் இவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

The post உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த தன்கரை சந்தித்தார் கவர்னர் ஆர்.என்.ரவி appeared first on Dinakaran.

Tags : Governor ,R.N. Ravi ,Dhankar ,Supreme Court ,New Delhi ,Governor R.N. Ravi ,Vice President ,Jagadeep Dhankar ,Delhi ,Tamil Nadu government ,Tamil Nadu Assembly ,Dinakaran ,
× RELATED டெல்லியில் காற்றின் தரக்குறியீடு...