நன்றி குங்குமம் ஆன்மிகம்
மரணத்தைக் கண்டு அஞ்சாதவர்கள் இருக்கிறார்களா?
– கு.சந்தோஷ்குமார், திண்டிவனம்.
பதில்: நம்முடைய ஆன்மிகப் பெரியவர்கள் மரணத்தைக் கண்டு அஞ்சாதவர்கள். பாரதி, ‘‘காலா உன்னை நான் சிறு புல் என மதிக்கின்றேன்; என் காலருகே வாடா, உன்னைச் சற்றே மிதிக்கின்றேன்’’ என்று காலனையே அதட்டியவர். “அச்சமில்லை அச்சமில்லை” என்று கம்பீரமாகப் பாடியவர். அப்பர், ‘‘கற்றுணை பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே” என்று துணிந்து நின்றவர்.
ஒருமுறை மாவீரன் நெப்போலியனிடம் ஒருவர் கேட்டார்.‘‘மரணத்தைப் பற்றிய அச்சம் உங்களுக்கு இல்லையா?’’ ‘‘இல்லை’’ ‘‘வியப்பாக இருக்கிறது. மரணத்தைக் கண்டு அஞ்சாதவர்கள் இருக்க முடியுமா?’’ ‘‘நான் இருக்கிறேன்’’‘‘அதுதான் எப்படி?’’ நெப்போலியன் சொன்னான்;‘‘நான் இருக்கும் வரை மரணம் என்னை நெருங்காது. மரணம் வந்த பின்னால் நான் இருக்க மாட்டேன். நான் இல்லாத போது வரும் மரணத்தைக் கண்டு நான் ஏன் அஞ்ச வேண்டும்?’’
?கலி முற்றி எங்கெங்கும் துன்பங்களும் துயரங்களும் சூழ்ந்துள்ள இன்றைய உலகின் முக்கியத் தேவை என்ன?
– கோபிநாதன், மதுரை.
பதில்: இன்றைய முக்கியத் தேவை அறவாளர்கள். இன்றைக்கு சாமர்த்தியசாலிகள் இருக்கிறார்கள். ஆனால், அறம்சார்ந்தும், மனிதாபிமானம் சார்ந்தும் பிறரைப்பற்றி சிந்திக்கக் கூடியவர்கள் இல்லை. இன்றைய இளைஞர்கள் உணர்வு மிக்கவர்கள். ஊற்றமுடையவர்கள். நுண்ணறிவு உடையவர்கள். உழைப்பாளிகள். இவர்களுக்குச் சரியான வழிகாட்டிகள் இருந்துவிட்டால் மிகப் பெரிய நன்மையை, அவர்களும், அவர்களைச் சார்ந்த தேசமும், உலகமும் அடையும். விவேகானந்தர் இதைத்தான் சொன்னார். தேசபக்தியும், தெய்வபக்தியும், தன்னம்பிக்கையும் உள்ள ஒரு சில இளைஞர்கள் இருந்தால் போதும், என்றார். விவேகானந்தரைப் போன்றவர்கள் இன்றைக்கு மிகவும் தேவைப்படுகிறார்கள்.
?தகுதி என்றால் என்ன?
– தாசபிரகாஷ், மயிலாடுதுறை.
பதில்: ஒருவனுக்கு எந்த ஒரு நன்மையோ, பதவியோ, பெருமையோ கிடைக்கின்றபோது அவன் அதற்கு உரியவன் தானா என்று சமூகம் பார்க்கிறது. தகுதி இல்லாதவன் பெருமையோ பதவியோ பெறுகின்ற பொழுது சமூகம் அதை ஏற்றுக் கொள்வதில்லை. சரி.. தகுதி.. தகுதி.. என்கிறோமே, தகுதி என்றால் என்ன என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தகுதி என்ற மூன்றெழுத்துச் சொல்லுக்கு த-தன்னம்பிக்கை; கு-குறிக்கோள்; தி-திறமை என்று எடுத்துக் கொள்ளலாம். தன்னம்பிக்கையும், திறமையும் கொண்டு ஒரு குறிக்கோளை அடைய முயற்சி செய்பவர்களைத்தான் தகுதி உடையவர்கள் என்று கருதுகிறார்கள்.
? தினசரி வாழ்க்கை என்பது போராட்டமாகவும், சவால்கள் நிறைந்ததாகவும் தானே இருக்கிறது?
– சு.கிருஷ்ணவேணி, ஜீயபுரம்.
பதில்: ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். சவால்களும் சிக்கல்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை. எந்தக் கப்பலும் துறைமுகத்தில் பாதுகாப்பாகவே இருக்கும். ஆனால், அதற்காக கப்பல் கட்டப்படுவதில்லை. கடலில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு பயணம் செய்வதற்காகத்தான் கப்பல் தயாரிக்கப்படுகிறது. நாம் வாழ்வதும் ஒரு பயணம்தான். இதை எதிர்கொண்டு சமாளிப் பதற்காகத்தான் நமக்கு அறிவும் ஆற்றலும் வழங்கப்பட்டு இருக்கிறது. தெய்வ பலமும் துணை நிற்கிறது.
?ஆரோக்கியமாக இருப்பது எப்படி?
– ஆர். தீபிகா வினோத், சென்னை.
பதில்: ஆரோக்கியம் என்பது உருவாக்கப்படுவதில்லை. அதுதான் உடம்பின் அடிப் படையான இயல்பு. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். நம் உடலைப் படைத்த ஆண்டவன், எத்தகைய நோயையும் தாக்குப் பிடிப்பது போல பல ஏற்பாடுகளை, உடலுக்குள்ளேயே செய்து வைத்திருக்கிறான். நோய்க்கு உரிய கிருமி நம் உடலுக்குள்ளே நுழைவதும், நம்மை அறியாமலேயே நம் உடம்பில் உள்ள மற்ற விஷயங்கள் (immunity) அதை எதிர்கொண்டு தாக்குதல் நடத்தி அடிப்பதும் சதா சர்வ காலமும் நடந்து கொண்டே இருக்கின்றது. ஆனால், இதை உணராமல் நோய்களை நாம்தான் வரவேற்று நம்முடைய உடம்பை பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
?எனக்கு ‘‘சட் சட்’’ என்று கோபம் வந்துவிடுகிறது. என்ன செய்வது?
– லட்சுமி நாராயணன், திருவெள்ளறை.
பதில்: கோபம் என்பது ஒரு உணர்ச்சியின் பெருக்கு. அது வராமல் இருக்காது. கோபம் வரும் போது அதை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் என்பதில்தான் விஷயம் அடங்கி இருக்கிறது. சின்ன விஷயம் சொல்கிறேன். பயன்படுமா பாருங்கள். கோபமாக இருக்கும் போது பேசாதீர்கள். அதைப் போலவே கோபமாக இருப்பவர்கள் பேசுவதையும் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளாதீர்கள்.
?சத்சங்கத்திற்கு அவ்வளவு ஏற்றமா?
– ஸ்ரீபதிராஜன், டால்மியாபுரம்.
பதில்: சமஸ்கிருதத்தில் ‘சத்’ என்றால் உண்மை என்று பொருள். ‘சங்கம்’ என்றால் கூடும் இடம் என்று பொருள். ‘சத்சங்கம்’ என்றால் உண்மை இணையும் இடம் என்று பொருள் ஆகிறது. நம் முன்னோர்கள் பொதுவாக குருவுடன் இருத்தல், ஒழுக்கத்திலும் ஞானத்திலும் மேன்மையானவர்களுடன் இருத்தல் ஆகியவற்றை சத்சங்கம் என்று சொன்னார்கள். இதன் பெருமை வார்த்தைகளால் சொல்லமுடியாது.
“நல்லாரைக் காண்பதுவும் நன்றே – நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே.
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே
அவரோடு இணங்க இருப்பதுவும் நன்றே’’
இந்த கதை சத்சங்கத்தின் அருமையை விளக்கும்.
விஸ்வாமித்திரர் ஒரு யாகம் செய்யத் தீர்மானித்தார். அந்த யாகத்தின் முடிவில், இருப்பதையெல்லாம் தானம் கொடுத்துவிட வேண்டும் என்பது முறை. அதை அனுசரித்து விஸ்வாமித்திரர், தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் தானம் கொடுத்துக் கொண்டிருந்தார். அதை அறிந்த வசிஷ்டர், விஸ்வாமித்திரர் கொடுக்கும் தானத்தைத் தானும் பெறுவதற்காக வந்தார். வசிஷ்டரின் வருகையை அறிந்த விஸ்வாமித்திரர், மனம் மகிழ்ந்து வசிஷ்டருக்குத் தானம் கொடுத்தார். தானம் பெற்ற வசிஷ்டரும் அமைதியாகத் திரும்பினார். சில நாட்கள் ஆகின. விஸ்வாமித்திரர் செய்ததைப் போலவே தானும் ஒரு யாகம் செய்ய எண்ணினார் வசிஷ்டர்.
நல்லவர்களின் நல்ல தீர்மானம் அல்லவா? உடனடியாகச் செயல் பாட்டிற்கு வந்தது.ஆம்! வசிஷ்டர் யாகம் செய்தார், யாகத்தின் முடிவில் தன்னிடம் இருந்தவற்றை யெல்லாம் தானம் செய்யத் தொடங்கினார். தகவல் அறிந்த விஸ்வாமித்திரர், ‘‘வசிஷ்டர் தானம் கொடுக்கிறார் என்றால், அது விசேஷம்தான். நாமும் போய் அதைப் பெற வேண்டும்” என்று புறப்பட்டு வந்தார். ஆனால், விஸ்வாமித்திரர் வருவதற்குள்ளாக வசிஷ்டர், தன்னிடம் இருந்த அனைத்தையும் தானம் கொடுத்து முடித்துவிட்டார். அதை அறிந்ததும் விஸ்வாமித்திரர் கொதித்தார். “ஆ! வசிஷ்டரே! நீர் என்னை அவமானப் படுத்திவிட்டீர். தானம் வாங்க வந்த என்னை வெறுங்கையுடன் அனுப்ப எண்ணிவிட்டீர் போலிருக்கிறது” என்றார்.
அவரை அமைதிப்படுத்திய வசிஷ்டர், “விஸ்வாமித்திரரே! கோபம் வேண்டாம்! பொருட்கள் இல்லாவிட்டால் என்ன? நல்லவர்களுடன் சேர்ந்திருந்த சத்சங்க சஹவாசப்பலன், ஒரு நாழிகை (24 – நிமிடங்கள்) என்னிடம் உள்ளது. அதில் கால் பங்கை உங்களுக்குத் தருகிறேன்” என்றார்.
அதைக் கேட்டதும் விஸ்வாமித்திரர் மேலும் கோபப்பட்டார். அப்போதும் வசிஷ்டர் கோபப்படவில்லை. “சரி! விஸ்வாமித்திரரே! நீங்கள் போய், உலகுக்கெல்லாம் ஔி கொடுக்கும் சூரியனையும், பூமியைத் தாங்கும் ஆதி சேஷனையும் நான் அழைப்பதாகச் சொல்லி அழைத்து வாருங்கள்!” என்றார். சற்று யோசித்த விஸ்வாமித்திரர், “சரி! போய்த்தான் பார்ப்போமே!” என்று எண்ணிப் புறப்பட்டார். போனவர், ஆதிசேஷனிடம் தகவலைச் சொல்லி அழைத்தார். ஆதிசேஷன், “சுவாமி! நான் வந்துவிட்டால், என் வேலையை யார் செய்வது?’’ எனக்கேட்க, விஸ்வாமித்திரர் சூரியனிடம் போய்த் தகவலைச் சொல்லி அழைத்தார்.
சூரியபகவானோ, “சுவாமி! உங்களுடன் நான் வந்தால், என் வேலையை யார் செய்வார்கள்? உலகம் இருண்டு போய் விடாதா?” எனச் சொல்லி மறுத்தார்.விஸ்வாமித்திரர் திரும்பி வந்து, நடந்தவற்றை வசிஷ்டரிடம் சொன்னார். உடனே வசிஷ்டர், “அப்படியா? சரி! ஒரு நாழிகை சத்சங்க சஹவாசப்பலன் என்னிடம் இருப்பதாகச் சொன்னேன் அல்லவா? அதில் கால் பங்கை ஆதி சேஷனுக்கும், கால் பங்கை சூரிய பகவானுக்கும் அளிக்கிறேன். இப்போது போய்க் கூப்பிடுங்கள்!” என்றார். விஸ்வாமித்திரரும் போய் ஆதிசேஷனிடமும் சூரிய பகவானிடமும் தகவல் சொல்லி அழைத்தார். அவர்கள் இருவரும் உடனே வந்து விட்டார்கள். “முதலில் மறுத்த நீங்கள், இப்போது வருகிறீர்களே எப்படி? இப்போது மட்டும் உங்கள் வேலையை யார் செய்வார்கள்?” எனக் கேட்டார்.
‘‘வசிஷ்டர் அளித்த கால் பங்கு சத்சங்க சஹவாசப்பலன் வேலையைச் செய்யும்” என்று ஆதிசேஷனும் சூரியபகவானும் பதில் அளித்தார்கள்.விஸ்வாமித்திரருக்கு அப்போதுதான் உண்மை புரிந்தது. சத்சங்க சஹவாசப் பலன், அதாவது நல்லவர்களின் கூட்டுறவு – சேர்க்கை எப்படிப்பட்ட சக்தி படைத்தது என்பதை உணர்ந்தார். அப்புறம் என்ன? விஸ்வாமித்திரர் பணிவோடு, வசிஷ்டரிடம் இருந்து கால் பங்கு சத்சங்க சேர்க்கையின் பலனைப் பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பினார். திரும்பிய விஸ்வாமித்திரர் தன் ஆசிரமத்தை நெருங்கும் போது, ஆசிரம வாசலில் மகாவிஷ்ணுவைப் போலத் தோற்றம் கொண்ட இருவர் இருப்பதைப் பார்த்தார்.
அவர்களை நெருங்கி விஸ்வாமித்திரர் கேட்பதற்குள், அவர்களே விஸ்வாமித்திரரை நெருங்கி வந்து, “சுவாமி! நாங்கள் பகவானின் ஏவலர்கள். பகவான் ஸ்ரீராமராக அவதாரம் செய்யப் போகிறார். அப்போது சீதாதேவிக்கும் ஸ்ரீராமருக்கும் திருமணம் செய்து வைக்கும் பாக்கியம் உங்களுக்குக் கிடைத் திருக்கிறது. பகவான் அறிவித்துவிட்டு வரச் சொன்னார். எல்லாம் சத்சங்க சஹவாசப்பலன் என்று சொல்லிச் சென்றார்கள். அதன் படியே யாக சம்ரட்சணம் என்ற பெயரில் ஸ்ரீராமரையும், லட்சுமணனையும், விஸ்வாமித்திரர் அழைத்துப் போனதும், சீதாகல்யாணம் நடந்ததும் தெரியுமே! நல்லவர்களின் தொடர்பு என்ன பலனைத் தரும் என்பதை விளக்கும் கதை இது.
?அபரான்னகாலம் என்றால் என்ன?
– சித்ரா பார்த்தசாரதி, கீரனூர்.
பதில்: பகல் பொழுதை ஐந்து பாகமாகப் பிரித்து அதில் நான்காம் பாகத்தில் உள்ள கால அளவே அபரான்னம் எனப்படும். அபரான்னமே பிதுர்களுக்கு உகந்த காலமாகும். திதி, தெவசம், பித்ரு பூஜை, தர்பணம் போன்ற முன்னோர் வழிபாட்டை, வீடு மற்றும் புனித ஸ்தலங்களில் ‘‘அபரான்னகாலம்’ என அழைக்கப்படும் பிற்பகல் 1:12 முதல் 3:36 வரையிலான காலத்தில் செய்ய வேண்டும்.
இந்த அபரான்ன காலத்தில்தான் பித்ருக்கள் நாம் அளிக்கும் எள்ளும் தண்ணீரையும் உணவாக அருந்தி நம்மை ஆசீர்வதிக்க வருகிறார்கள். ச்ராத்த திதி இரண்டு நாட்களிலும் இருந்தால், அபரான்ன காலத்தில் திதி அதிகமாக உள்ள அன்றுதான் சிராத்த திதி கடைப்பிடிக்க வேண்டும். திதி ‘‘அபாரன்ன’’ காலத்தில் இல்லாத நாட்களில் ‘‘குதப காலம்’’ என அழைக்கப்படும் நண்பகல் 11:36 முதல் 12:24 மணி வரையிலான காலத்தில் முன்னோர்களுக்கு வழிபாடு செய்யவேண்டும். இந்த காலத்தில் திதி இருக்கும் அடிப்படையில்தான் பஞ்சாங்கத்தில் ‘‘சிரார்த்த திதி’’ தீர்மானிக்கப்படுகிறது. அப்போது ராகு காலம், எமகண்டம் வந்தால் என்ன செய்வது என்பார்கள் சிலர். ராகு காலம், எமகண்டம் போன்ற விஷயங்களுக்கும் முன்னோர் வழிபாட்டிற்கும் தொடர்பில்லை.
தொகுப்பு: தேஜஸ்வி
The post தெளிவு பெறுஓம்: மரணத்தைக் கண்டு அஞ்சாதவர்கள் இருக்கிறார்களா? appeared first on Dinakaran.