×

அரசியல் அதிகாரத்தில் பெண்கள் 100% பாலின சமத்துவம் பெற இன்னும் 169 ஆண்டுகளாகும்

 

WomenPower, Gender Equality
* சொல்கிறது உலகளாவிய கணக்கீடு
* மேம்பாட்டு அமைப்புகள் தகவல்

நாகரீகத்திலும், விஞ்ஞான வளர்ச்சியிலும் நாடு அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அரசியல், நீதித்துறை, காவல்துறை, தொழில்நுட்பத்துறை என்று அனைத்திலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாதனை படைத்து வருகிறார்கள். இதனால் ‘பெண்கள் நாட்டின் கண்கள்’ என்று வையகம் அவர்களை கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு பாலின சமத்துவம் என்பது பல்லாண்டுகளாக உலகம் முழுவதும் நீடித்து வரும் பெரும் இடைவெளியாக மாறி நிற்கிறது.

ஆண்களை போல எங்களுக்கும் சமஉரிமைகள் வழங்க வேண்டும். வாய்ப்புகளை தரவேண்டும் என்று நூறாண்டுகளுக்கு முன்பு பெண்கள் கிளர்ந்து எழுந்தனர். இதன் தொடர்ச்சியாக 1920ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம்தேதி, அமெரிக்காவில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் அதேநாளில் ‘பெண்கள் சமத்துவதினம்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது.

கல்வி, வேலை, ஊதியம், வாய்ப்புகள், வாக்களிக்கும் உரிமை, அரசியல் என்று அனைத்திலும் ஆண்களுக்கு இணையான பங்களிப்பை பெண்களுக்கு வழங்குவதே இந்தநாளின் நோக்கமாகும். இதையொட்டி பெண்களின் உரிமை குறித்த பல்வேறு ஆய்வுகளை அவர்கள் நலன்சார்ந்த மேம்பாட்டு அமைப்புகள் வெளியிட்டு வருகிறது. இந்தவகையில் நடப்பாண்டும் பல்வேறு தகவல்கள் மற்றும் புள்ளி விபரங்கள் பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து பெண்கள் மேம்பாடு சார்ந்த தேசிய அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: பாலின இடைவெளி குறியீட்டை கணக்கிடுவதை வைத்து தான் பாலின சமத்துவமும் மதிப்பிடப்படுகிறது. இதில் துணைக்குறியீடுகளாக பெண்களின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, உடல்ஆரோக்கியம் மற்றும் அரசியல் அதிகாரம் குறித்த நடப்புநிலை அளவீடுகள் கணக்கிடப்படுகிறது. பாலின இடைவெளியில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஓய்இஎப் என்ற அரசு சாரா பன்னாட்டு பொருளாதார மன்றத்தின் அறிக்கை என்பது உலகளவில் ஒரு திசைகாட்டியாக விளங்குகிறது.

இதில் நடப்பாண்டை (2024) பொறுத்தவரை உலகளாவிய நல்வாழ்வு, கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் பாலின இடைவெளி என்பது 100 ஆண்களுக்கு 68.5சதவீதம் பெண்கள் என்ற ரீதியில் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டுடன் (2023) ஒப்பிடும் போது நடப்பாண்டு0.1சதவீதம் மட்டுமே முன்னேற்றம் கண்டுள்ளது. தற்போதைய தரவுகளின் படி கல்வி பெறுவதில் பெண்கள் பாலின சமத்துவம் உருவாக இன்னும் 20 ஆண்டுகள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பில் பெண்கள் பாலின சமத்துவம் பெறுவதற்கு 152ஆண்டுகளாகும். அரசியல் அதிகாரத்தில் பெண்கள் 100சதவீதம் பாலின சமத்துவம் பெறுவதற்கு இன்னும் 169ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருப்பது தான் வேதனைக்குரியது. கடந்த 15ஆண்டுகளாக உலகின் பாலின சமத்துவம் மிகுந்த நாடுகளில் முதன்மையானது (93.5%) என்ற பெருமையை ஐஸ்லாந்து தக்கவைத்துள்ளது.

பின்லாந்து 87.5சதவீதம், நார்வே 87.5 சதவீதம், நியூசிலாந்து 83.5சதவீதம், ஸ்வீடன் 81.6சதவீதம் என்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. நிக்குரவா, ஜெர்மனி, நமிபியா, அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் பெண்கள் பாலின சமத்துவம் காப்பதில் முதல் 10இடங்களை பிடித்துள்ளன. பெண்கள் பாலின சமத்துவத்தில் இங்கிலாந்து 14வது இடத்திலும், அமெரிக்கா 43வது இடத்திலும் உள்ளன. தெற்காசியாவில் பங்களாதேஷ் 99வது இடத்தை பிடித்துள்ளது. இதனால் உலகில் பெண்கள் பாலின சமத்துவம் மிகுந்த 100 நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ேநபாளம் 117வது இடத்தையும், இலங்கை 122வது இடத்தையும் பிடித்துள்ளது.
இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

129வது இடத்தில் இருக்கும் இந்தியா

உலகளாவிய பாலின குறியீட்டில் இந்தியா 64.1சதவீதம் என்ற ரீதியில் 129வது இடத்திற்கு சென்றுள்ளது. உலகளவில் மொத்தமுள்ள 146நாடுகளின் வரிசையில் இந்தியா கடைசி 20 இடங்களுக்குள் உள்ளது. முக்கியமாக பெண்கள் கல்வி பெறுதல், பெண்களின் அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் ஏற்பட்ட சரிவின் காரணமாகவே இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 

இதில் பாகிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகள் 145,146 என்று கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளன. அதிக பாலின இடைவெளிகளை குறைத்துள்ள பகுதிகளில் ஐரோப்பா 75சதவீதம் என்ற ரீதியில் முதலிடத்தில் உள்ளது. தெற்காசிய பகுதிகளை பொறுத்தவரை 63.7சதவீதம் என்ற ரீதியில் 7வது இடத்தில் உள்ளது,’’ என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

முக்கிய களங்களில் முன்னேற்றம் மந்தம்

கடந்த 10ஆண்டுகளில் பெண்களின் வளர்ச்சி என்பது பல்வேறு நிலைகளில் முன்ேனற்றம் கண்டுள்ளது. மகப்பேறு கால இறப்புகள் என்பது 10சதவீதம் குறைந்துள்ளது. மேல்நிலைப்பள்ளிகளில் பெண்களின் சேர்க்கை 5சதவீதம் அதிகரித்துள்ளது.

இதேபோல் வணிகம், பொருளாதார வளர்ச்சியும் குறிப்பிட்ட அளவில் மேம்பட்டுள்ளது. அவர்களுக்கான உரிமைகள் குறித்த சட்டவிழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. தேசிய நாடாளுமன்றங்களில் முன்பை விட, தற்போது அதிகமான பெண்கள் பதவி வகிப்பதும் தெரியவந்துள்ளது. ஆனாலும் அறிவியல் ஆராய்ச்சி, அதிகாரம் போன்ற முக்கிய களங்களில் முன்னேற்றம் மிகவும் மெதுவாகவே உள்ளது என்பதும் பெண்ணிய மேம்பாட்டு அமைப்புகளின் ஆதங்கம்.

The post அரசியல் அதிகாரத்தில் பெண்கள் 100% பாலின சமத்துவம் பெற இன்னும் 169 ஆண்டுகளாகும் appeared first on Dinakaran.

Tags :
× RELATED தொடர்ந்து 2வது நாளாக தாமதமாக புறப்பட்ட...