×

ஆணாக வாழ்வதற்கு எங்களுக்கு ஆசை; பாலின மாற்ற அனுமதி கேட்டு 2 பெண் காவலர்கள் விண்ணப்பம்: உ.பி காவல்துறை தடுமாற்றம்

லக்னோ: ஆணாக வாழ வேண்டும் என்பதற்காக பாலின மாற்ற அனுமதி கேட்டு 2 பெண் காவலர்கள் உத்தரபிரதேச காவல் துறை தலைவருக்கு விண்ணப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச காவல்துறையில் வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் இரண்டு பெண் காவலர்கள், தங்களது பாலினத்தை மாற்றிக்கொள்ள அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர். இந்த இரண்டு பெண் காவலர்களின் விண்ணப்பங்களுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இதுகுறித்து ேபாலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கோரக்பூர், கோண்டா மாவட்டங்களில் பணியாற்றி வரும் இரண்டு பெண் காவலர்கள், தங்களது பாலினத்தை மாற்றிக் கொண்டு ஆணாக வாழ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்விகாரத்தில் டிஜிபி தலைமையக அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பெண் கான்ஸ்டபிள்களை வரவழைத்து கவுன்சிலிங் கொடுத்தனர்.

மேலும் பெண்ணாக இருந்து பாலின மாற்றம் செய்து கொள்வதற்கான தொழில்நுட்ப மற்றும் சட்ட அம்சங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். பிரச்னை என்னவென்றால், அவர்கள் இருவரும் பணியில் சேரும் போது பெண்கள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணிநியமனம் பெற்றனர். ஆனால் தற்போது தங்களது பாலினத்தை மாற்றிக் கொள்ள முடியுமா? என்பதில் சட்ட சிக்கல்கள் உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பெண் காவலராக பணியில் சேர்ந்த ஒருவர் தனது பாலினத்தை மாற்றி ஆணாக மாற்ற அனுமதித்தால், அது காவல் துறையில் ஆட்சேர்ப்பு விதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். மாநில காவல் துறையின் விசாரணைக்கு மத்தியில், சம்பந்தப்பட்ட இரு பெண் காவலர்களும் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். தற்போது உயர் நீதிமன்றம் ​​டிஜிபி தலைமையகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதால், மாநில அரசின் கொள்கை முடிவுக்காக காத்திருக்கிறோம்’ என்றனர்.

The post ஆணாக வாழ்வதற்கு எங்களுக்கு ஆசை; பாலின மாற்ற அனுமதி கேட்டு 2 பெண் காவலர்கள் விண்ணப்பம்: உ.பி காவல்துறை தடுமாற்றம் appeared first on Dinakaran.

Tags : U. B police ,Lucknow ,Uttar Pradesh Police Department ,
× RELATED நாட்டையே உலுக்கிய ஐடி ஊழியர் தற்கொலை...