×

குப்பை மறுசுழற்சி செய்ய தனித்தனியாக சேகரிக்கும் பணி தூய்மையான தமிழ்நாட்டை அனைவரும் சேர்ந்து உருவாக்குவோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினமான 5ம் தேதி (நேற்று) தமிழ்நாடு முழுவதும் 1100 அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும் நோக்கில் கழிவுகளை சேகரிக்கும் மாபெரும் முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் இதுவரை சுமார் 250 மெட்ரிக் டன் அளவிலான கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட கழிவுகள் அனைத்தும் உயர் தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டு மீள்பயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதற்காக உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர், சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் பல்வேறு வகையான குப்பையை மறுசுழற்சி செய்வதற்காக தனித்தனியாக சேகரிக்கும் பணி குறித்து காணொலி காட்சி வாயிலாக மாவட்ட கலெக்டர்களிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்திற்கு பின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: சட்டப் பேரவை கூட்டத்தொடரின் போது முதல்வர் உத்தரவின்பேரில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தூய்மையாக்க வேண்டும். குப்பை மேலாண்மை சரியாக செய்ய வேண்டும் என்பதற்காக, தூய்மை மிஷன் என்ற திட்டத்தை முதல்வர் உத்தரவின் பேரில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் சார்பாக மானியக் கோரிக்கையில் அறிவித்தோம். இதற்காக முதல்வர் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்தார். தற்போது சேகரிக்கப்பட்டுள்ள குப்பைகளை சட்டவிதிகளின்படி அப்புறப்படுத்துவதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு நாட்களில் இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது என்று பார்த்துவிட்டு, அடுத்தகட்டமாக, கிராம பஞ்சாயத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் ஆகியவற்றிலும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கு இன்னும் 10 நாட்களில், அனைத்து அரசு அலுவலகங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து, இந்த திட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கு பெற்று தூய்மையான தமிழ்நாட்டை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்குவோம் என்று இந்த திட்டத்தின் மூலமாக, அரசின் சார்பாக பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

The post குப்பை மறுசுழற்சி செய்ய தனித்தனியாக சேகரிக்கும் பணி தூய்மையான தமிழ்நாட்டை அனைவரும் சேர்ந்து உருவாக்குவோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Deputy ,Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,World Environment Day ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை...