வேளச்சேரி: வேளச்சேரியில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்து மோசடி செய்தது தொடர்பாக, இன்று முன்னாள் அதிமுக கவுன்சிலர் உள்ளிட்டோர் வீடுகளில் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை வேளச்சேரியில் உள்ள 1200 சதுர அடி நிலத்தை கடந்த 2021ம் ஆண்டு, அப்பகுதி அதிமுக கவுன்சிலர் எம்.ஏ.மூர்த்தி, அவரது மனைவி சுதா பெயரிலும் சட்டவிதிகளை மீறி முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக புகார் எழுந்தது. பொதுவாக, நகர்ப்புற நில முறைப்படுத்தல் சட்டத்தின்கீழ் கட்டுமானம் மேற்கொள்வது குறித்து பத்திரப்பதிவு செய்ய வேண்டும். எனினும், முன்னாள் அதிமுக கவுன்சிலர் சட்டவிதிகளை மீறி 1200 சதுர அடி முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து முன்னாள் அதிமுக கவுன்சிலரின் பத்திரப்பதிவுக்கு உடந்தையாக செயல்பட்ட தாசில்தார் மணிசேகர், சர்வே துணை ஆய்வாளர் லோகநாதன், உதவி ஆய்வாளர் சந்தோஷ், தாலுகா அதிகாரி தேவி, முன்னாள் அதிமுக கவுன்சிலர் மூர்த்தி, அவரது மனைவி உள்பட 6 பேர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், முன்னாள் அதிமுக கவுன்சிலரின் முறைகேடான பத்திரப்பதிவுக்கு மேற்கண்ட அதிகாரிகள் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், வேளச்சேரியில் அமிர்தம் நகரில் உள்ள முன்னாள் அதிமுக கவுன்சிலர் மூர்த்தியின் வீடு மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் வீடு உள்பட 5 இடங்களில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இதேபோல் சென்னை மேற்கு மாம்பலம், திருவல்லிக்கேணி மற்றும் கோவை வடுகபாளையம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனை முடிவில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கைது நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்து வருவதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்தனர்.
The post வேளச்சேரியில் நிலம் பத்திரப்பதிவில் மோசடி: முன்னாள் அதிமுக கவுன்சிலர் வீட்டில் ரெய்டு appeared first on Dinakaran.