×

வேளச்சேரியில் கார் கவிழ்ந்து விபத்து சின்னத்திரை நடிகரின் மகன் பலி: நண்பர்கள் படுகாயம்

சென்னை: வேளச்சேரி விஜயநகரில் சென்டர் மீடியனில் கார் மோதி கவிழ்ந்ததில் சின்னத்திரை நடிகரின் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.  சென்னை, ஆர்.ஏ.புரம் எஸ்பிஐ காலனியை சேர்ந்தவர் கார்த்திக், சின்னத்திரை நடிகர். இவரது மகன் நித்திஷ் ஆதித்யா (21), படூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ 3ம் ஆண்டு படித்து வந்தார். மேலும் மேடவாக்கத்தில் கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு மேடவாக்கத்தில் கிரிக்கெட் பயிற்சி முடித்து விட்டு, தன்னுடன் பயிற்சி பெறும் அண்ணா சாலையை சேர்ந்த வெங்கடேசன் (25), ஜெய கிருஷ்ணன் (25) ஆகிய இருவரையும் தனது காரில் ஏற்றிக்கொண்டு அவர்களை வீட்டில் விடுவதற்காக வேளச்சேரி மெயின் சாலை வழியாக வந்து கொண்டிருந்தார்.

அதிகாலை 2.10 மணிக்கு விஜய நகர் பஸ் நிறுத்தம் சந்திப்பில் வந்தபோது எதிர்பாராதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த நித்திஷ் ஆதித்யா பலத்த காயமடைந்து மயங்கி கிடந்தார். உடன் வந்தவர்களும் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நித்திஷ் ஆதித்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். நண்பர்கள் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீட் பெல்ட் அணியாததே விபத்தில் உயிரிழந்ததற்கு காரணம் என தெரியவந்தது. கிண்டி போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேளச்சேரியில் கார் கவிழ்ந்து விபத்து சின்னத்திரை நடிகரின் மகன் பலி: நண்பர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Velachery ,Chennai ,Velachery Vijayanagar ,Karthik ,RA Puram SBI Colony ,Nitish Aditya ,Badur ,
× RELATED மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்