×

வெள்ளக்காடானது காவேரிப்பட்டணம்; 300 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் 300 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை, வெயில் அடித்த நிலையில் இரவில் மழை கொட்டியது.

காவேரிப்பட்டணம், பெனுகொண்டாபுரம், பாரூர், நெடுங்கல், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, கேஆர்பி அணை மற்றும் கிருஷ்ணகிரி என மாவட்டம் முழுவதும் பரவலாக விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடானது. குறிப்பாக, காவேரிப்பட்டணம் ஒன்றியம், மிட்டஅள்ளி ஊராட்சி எம்ஜிஆர் நகர் பகுதியில் சாலையில் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. மேலும், 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். முட்டளவுக்கு தண்ணீர் ஓடியதால், பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர்.

இதேபோல், காவேரிப்பட்டணம் ஒன்றியம், குண்டலப்பட்டி ஊராட்சியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் குழந்தைகள் மையத்திற்குள் தண்ணீர் புகுந்து, குளம் போல தேங்கியது. காவேரிப்பட்டணம் அருகே மலையாண்டஅள்ளிபுதூர் பகுதியில், விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியது. மழை பாதிப்புகள் குறித்து தகவலறிந்த கலெக்டர் சரயு, காவேரிப்பட்டணம் விரைந்து சென்று நேரில் ஆய்வு செய்தார். அதிகபட்சமாக நெடுங்கல் 12 செ.மீ, போச்சம்பள்ளி 10, பெனுகொண்டாபுரம் 9, கிருஷ்ணகிரி 7 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால் ஏலகிரி மலைச்சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், பாறைகள் சரிந்து உருண்டு, மரங்களும் சாலையில் சாய்ந்தன. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். நெடுஞ்சாலைத்துறையினர் 10வது கொண்டை ஊசி வளைவில் முறிந்து விழுந்த மரத்தை பொக்லைன் இந்திரம் மூலம் அகற்றினர். 14வது கொண்டை ஊசி வளைவில் விழுந்த ராட்சத பாறையையும் அகற்றினர்.

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக நேற்று காலை ஏரிச்சாலை பகுதியில் மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். மாலையில் கொடைக்கானலில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளி பள்ளி கட்டிடம் மீது மரம் விழுந்தது. சுற்றுச்சுவர் மரத்தை தாங்கியதால் பள்ளி கட்டிடம் மிகப்பெரிய சேதம் ஏற்படாமல் தப்பியது.

The post வெள்ளக்காடானது காவேரிப்பட்டணம்; 300 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Malakada ,Kaverippatnam ,Krishnagiri ,Krishnagiri district ,Tamil Nadu ,Vilakada ,
× RELATED கிருஷ்ணகிரி பாலியல் தொல்லை...