மதுரை: முதல் குற்றத்தில் ஈடுபடும் சிறார்களை சீர்திருத்த முயற்சிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரையைச் சேர்ந்த 19 வயதான ஒருவர், செல்போன் திருட்டு வழக்கில் ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘மனுதாரருக்கு 19 வயதாகிறது. கைதான அதே நாளில் மேலும் 4 வழக்குகள் பொய்யாக பதிந்துள்ளனர்’’ என வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில், ‘‘மனுதாரர் தொடர்ச்சியாக இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார். அவர் மீது ஏற்கனவே 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமுதாயத்திற்கு தொடர்ந்து தொந்தரவாக செயல்படுகிறார். எனவே, ஜாமீன் வழங்கக் கூடாது’’ என வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ‘‘ஒரு இளைஞன் ஒரு குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டாலும், காவல் துறையினர் வெவ்வேறு வழக்குகளில் சிக்க வைக்கப் போகிறார்கள் என்பது புரிந்தவுடன் தொடர்ச்சியாக குற்றங்களில் ஈடுபட முடிவு செய்கிறான். ஒரு கூட்டத்தின் தலைவனாகிறான். குற்றவாளிகளாக மாறிய பல சிறார்களின் கதை இது. சிறார்களை சீர்திருத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், அது தமிழ்நாடு முழுவதும் பரவவில்லை. எனவே, முதல் குற்றத்தில் ஈடுபடும் சிறார்களை சீர்திருத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவை தமிழக சிறை துறையின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் மதுரை சரக சிறை துறையின் துணை தலைவர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டும். மனுதாரர் செப். 29 முதல் சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர் மதுரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தினசரி காலை 10.30 மணிக்கு ஆஜராக கையெழுத்திட வேண்டும்’’ என நிபந்தனை விதித்துள்ளார்.
The post முதல் குற்றத்தில் ஈடுபடும் சிறாரை சீர்திருத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.