×

முதல்வர் தலைமையில் தூய்மை இயக்கத்தின் ஆட்சி குழு முதல் கூட்டம் தமிழ்நாடு நிறுவனத்தின் செயல்திறன் எதிர்கால திட்டம் குறித்து விவாதம் : தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் தினந்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தை செயல்படுத்திட தூய்மை தமிழ்நாடு நிறுவனம் என்ற அமைப்பு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இயக்கம் முதல்வர் தலைமையிலான ஆட்சிக் குழு, தலைமை செயலாளர் தலைமையிலான மாநில அளவிலான செயற்குழு, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட அளவிலான தூய்மை குழு மற்றும் வட்டார அளவில், நகர்ப்புற உள்ளாட்சி அளவிலான தூய்மை குழு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

தூய்மை இயக்கத்தின் மாநில அளவிலான செயற்குழுவின் முதல் கூட்டம் கடந்த ஏப்ரல் 30ம் தேதி தலைமை செயலகத்தில், தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், தூய்மை இயக்கத்தின் ஆட்சி குழு முதல் கூட்டம் முதல்வர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர், அனைத்து உள்ளாட்சி நிறுவனங்களும், கழிவுகளை, உற்பத்தி ஆகின்ற இடங்களிலேயே தனித்தனியாக பிரித்து கையாள வேண்டும். இதன்மூலம் உள்ளாட்சி அமைப்புகள் குப்பைக் கிடங்குகளை மட்டுப்படுத்தி, புதிய கழிவுகளை குப்பைக் கிடங்குக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

உள்ளாட்சி அமைப்புகளின் கழிவு மேலாண்மையை கண்காணித்து, நடுநிலையான முறையில் கருத்துகளை தூய்மை தமிழ்நாடு நிறுவனம் வழங்கிடவும், அத்துடன் ரியல்-டைம் டேட்டாவை உள்ளாட்சி அமைப்புகள் பகிர வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குவதற்கு தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் தூய்மை தமிழ்நாடு நிறுவனத்துடன் ஒன்றிணைந்து கழிவு மேலாண்மையிலிருந்து வருவாய் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த தூய்மை இயக்கத்தின் நோக்கங்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேரும் வகையில் பரப்புரை செய்ய வேண்டும், இளைய தலைமுறையினரை கவரும் வகையில் இது அமைய வேண்டும். குப்பை கொட்டுகிற இடங்களை சுத்தம் செய்து, மரங்கள் நட்டு, மக்கள் பயன்படுத்தும் விதமாக தூய்மை முனைகளாக மாற்றிட மக்களை ஊக்குவித்திட வேண்டும்.

அனைத்து அரசு துறைகளும் தூய்மை தமிழ்நாடு நிறுவனத்துடன் ஒத்துழைத்து, தூய்மை இயக்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றிட உறுதி செய்திட வேண்டும், கழிவு மேலாண்மை செயல்பாடுகளில் உள்ளாட்சி அமைப்புகள் என்ஜிஓக்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மூலமாக பொதுமக்கள் ஒத்துழைக்க சமூக ரீதியாக ஊக்குவிக்க வேண்டும். இந்த கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மையில் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தின் பொறுப்புகள் மற்றும் கடமைகள், நிதி ஆதாரம் மற்றும் வருவாய் ஈட்டும் செயல்பாடுகள், தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

 

The post முதல்வர் தலைமையில் தூய்மை இயக்கத்தின் ஆட்சி குழு முதல் கூட்டம் தமிழ்நாடு நிறுவனத்தின் செயல்திறன் எதிர்கால திட்டம் குறித்து விவாதம் : தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Swachh Bharat Abhiyan ,Chief Minister ,Tamil Nadu ,Tamil Nadu Government Information ,Chennai ,Tamil Nadu Government ,Special Project Implementation Department ,Dinakaran ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...