×

பட்டாசுகளை வெடித்து தீர்த்த சென்னை மக்கள் 2 நாளில் மட்டும் 213 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்: முழுமையாக அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள்

சென்னை: சென்னையில் தீபாவளி நாளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்ட நிலையில், நேற்றும் மதியம் வரை 213.61 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பட்டாசு கழிவுகளை முழுமையாக அகற்றும் வகையில் மாநகராட்சி பணியாளர்கள் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர். சென்னையில், அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி பட்டாசு வெடித்தாக 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, சென்னையில் நேற்று முன்தினம் அதிகாலை முதலே தீபாவளி பட்டாசு சத்தம் காதைக் கிழிக்கத் தொடங்கியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காலை 6 முதல் 7 மணி வரையில் ஒரு மணி நேரம், இரவு 7 முதல் 8 மணி வரையில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும், இடைப்பட்ட நேரங்களிலும் பெரும்பாலானோர் பட்டாசுகளை வெடித்தனர். நேற்று முன்தினம் இரவு நள்ளிரவு வரை பட்டாசுகள் வானத்தில் வர்ணஜாலம் காட்டியது.

அன்று இரவு 7 மணியில் இருந்து பட்டாசு சத்தம் அதிரச் செய்தது. ஒவ்வொரு வரும் குடும்பம் குடும்பமாக வீதிகளுக்கு வந்து பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி அடைந்தனர். சிறுவர்கள் புத்தாடை அணிந்து விதவிதமான பட்டாசுகளை கொளுத்தி பரவசம் அடைந்தனர். வானில் வெடித்து சிதறி வண்ணமயமாக பூக்களாக சிதறும் பட்டாசுகள் இந்த ஆண்டு அதிகளவில் மக்கள் பயன்படுத்தினார்கள். பகலை விட இரவில் தான் பட்டாசு அதிகளவில் வெடிக்கப்பட்டன. சென்னை மாநகரம் முழுவதும் வெடித்து சிதறிய பட்டாசு கழிவுகள் வீதிகளில் மலைபோல் தேங்கின. ஒவ்வொரு வீடுகளின் முன்பு வெடித்த பட்டாசுகளை பெருக்கி குவித்து வைத்திருந்தனர்.

சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்றுவதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. சென்னையில் தூய்மை பணிக்காக தினசரி தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள். இதில் பட்டாசு கழிவுகளை அகற்றுவதற்காக மட்டுமே நியமிக்கப்பட்ட 19,600 தூய்மை பணியாளர்கள் உள்பட மொத்தம் 23 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக பட்டாசு கழிவுகளை அகற்றி வருகின்றனர். சென்னையில் மொத்தம் 34 ஆயிரம் தெருக்கள் உள்ளன.

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தெருக்களில் மக்கள் வெடித்த பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று அதிகாலை முதலே ஈடுபட்டனர். கம்பிகள், பேப்பர்கள் மற்றும் அட்டைகள் என தனித்தனியாக தரம்பிரித்து குப்பைகளை சேகரித்தனர். தாங்கள் வழக்கமாக கொண்டு வரும் பேட்டரி வாகனம் உடனே நிரம்பி விட்டதால் அருகில் உள்ள மையங்களில் கொட்டி விட்டு மீண்டும் வந்து அள்ளினார்கள்.

இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் அக்டோபர் 31ம்தேதி நேற்று மாலை வரை 213.61 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்ததுள்ளது. அதிகபட்சமாக வளரசவாக்கம் மண்டலத்தில் 21.69 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள், தேனாம்பேட்டை மண்டலத்தில் 20 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள், அண்ணா நகர் மண்டலத்தில் 19 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள், அம்பத்தூரில் 19 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் என அனைத்து மண்டலங்களையும் சேர்த்து மொத்தம் 213.61 மெட்ரிக் டன் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். பட்டாசு கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு, நச்சு கழிவுகள் என்ற பிரிவின் கீழ் கும்மிடிப்பூண்டியில் உள்ள குப்பை சேகரிப்பு நிலையத்துக்கு லாரிகள் மூலம் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகின்றன. இதில் ஒரு மண்டலத்துக்கு இரண்டு வாகனங்கள் என 30 வாகனங்களில் பட்டாசு கழிவுகளை சேகரித்து கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகழிவு அகற்றும் ஆலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அழிக்கப்படுகிறது.

The post பட்டாசுகளை வெடித்து தீர்த்த சென்னை மக்கள் 2 நாளில் மட்டும் 213 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்: முழுமையாக அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Diwali day ,Chennai Municipal Corporation ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக சென்னையில் 3...