×

உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

*அதிகாரிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு

திட்டக்குடி : திட்டக்குடி தாலுகாவில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு செய்த ஆட்சியர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை அறிவித்ததின்படி, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்கள் தாலுகாவில் அரசின் நலத்திட்டங்களை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

மங்களூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமை ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். சிறுமுளை கிராமத்தில் என்எல்சி நிறுவனம் மூலம் ரூ.9 கோடியே 10 லட்சம் மதிப்பில் பெரிய ஓடையில் தடுப்பணை கட்டுமான பணிகளை ஆய்வு செய்ததையடுத்து, திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உரையாற்றி, அங்கு ரூ.2 கோடி 10 லட்சம் மதிப்பில் கட்டப்படும் கூடுதல் வகுப்பறையை ஆய்வு செய்தார்.

பின்னர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் செயல்பாடுகள் குறித்தும், திட்டக்குடி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எழுத்தூர்-தச்சூர் இடையே ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்பில் போடப்பட்ட தார் சாலையை ஆய்வு செய்தார்.

பின்னர் திட்டக்குடி தாலுகா அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் கள ஆய்வுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, மக்களின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் நகராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் தாலுகா அலுவலகத்தில் ஆட்சியர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

700க்கும் மேற்பட்ட மனுக்கள் இத்திட்டத்தில் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளி இருவருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட எஸ்பி ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், வளர்ச்சி திட்ட பணி இயக்குனர் சரண்யா மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Phetagkudi ,Phetagkudi taluk ,Dinakaran ,
× RELATED முகப் பருக்களை தடுக்கும் வழிமுறைகள்!