புதுடெல்லி: மக்களவைத் தேர்தலையொட்டி, கடந்த இரண்டரை மாதமாக அனல் பறந்த பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. இதைத் தொடர்ந்து, மக்களவை தேர்தலின் 7வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை நடக்க உள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக நடத்தப்படுகிறது. இதுவரை 6 கட்டமாக 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 486 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டது. 6 கட்ட தேர்தலில் முறையே 66.14, 66.71, 65.68, 69.16, 62.2, 63.36 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்நிலையில், 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. கடந்த மார்ச் 16ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேசிய கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தை தொடங்கினர். இம்முறை பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜ தலைவர்கள் மதம், சாதி, மொழி, இன ரீதியாக பிளவுபடுத்தும் மற்றும் வெறுப்பு பேச்சுக்களுடன் பிரசாரம் செய்தது கடும் விமர்சனத்திற்குள்ளானது. இதுதொடர்பாக பாஜ கட்சிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தும், மோடி உள்ளிட்ட தலைவர்கள் இறுதிவரை பிரசாரத்தில் வெறுப்பு பேச்சுக்களை தவிர்க்கவில்லை.
பிரசாரத்தின் நிறைவு நாளான நேற்று உச்சகட்ட அனல் வீசியது. பஞ்சாப்பில் 13 தொகுதிகளுக்கும் இறுதிகட்ட தேர்தலில் ஒரே கட்டமாக தேர்தல் நடப்பதால் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அங்கு முகாமிட்டு சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.
ஹோசியர்பூரில் பேசிய பிரதமர் மோடி, அக்னி வீரர்கள் திட்டத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சிப்பதை குறிப்பிட்டு, ‘‘நான் அமைதியாக இருப்பதால் தவறாக மதிப்பிட வேண்டாம். நான் வாயைத் திறந்தால் உங்களின் 7 தலைமுறை பாவத்தையும் வெளிப்படுத்தி விடுவேன். என்னைப் பற்றி எது வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால் நாட்டின் ராணுவத்தை குறை கூறாதீர்கள்’’ என்கிற கடுமையான எச்சரிக்கையுடன் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். மறுபக்கம், நவன்ஷரில் பேசிய ராகுல் காந்தி, ‘‘மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை கிழித்தெறிந்து வீசுவோம் என மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜ தலைவர்கள் தெளிவாக கூறி விட்டனர். எனவே அம்பேத்கரின் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான தேர்தல் இது’’ என தனது பிரசாரத்தின் நிறைவாக வலியுறுத்தினார். ‘‘மோடி தனது தரம்தாழ்ந்த பிரசாரத்தால் பிரதமர் பதவிக்கே களங்கத்தை ஏற்படுத்திவிட்டார், நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சர்வாதிகார ஆட்சியால் மீண்டும் மீண்டும் தாக்குலுக்கு உள்ளாக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான இறுதி வாய்ப்பு’’ என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இத்துடன் இரண்டரை மாதமாக நடந்த பிரசாரம் முடிவுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 57 தொகுதிகளுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இதில் பிரதமர் மோடி போட்டியிடும் உபியின் வாரணாசி தொகுதியிலும் தேர்தல் நடக்க இருக்கிறது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
The post அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது மக்களவைக்கு நாளை இறுதிகட்ட தேர்தல்: ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை appeared first on Dinakaran.