×

நகைக்கடனுக்கான நிபந்தனை கண்டித்து வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் சாலை மறியல்

திருச்சி: நிபந்தனையின்றி ரூ.2 லட்சம் நகைக்கடன் வழங்கக்கோரி திருச்சியில் தேசிய வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள ஸ்டேட் வங்கி மண்டல அலுவலகத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். இதில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். இதைதொடர்ந்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் கன்டோன்மென்ட் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு பேரணியாக சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நிபந்தனை இல்லாமல் ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் வழங்க வேண்டும். பெரும்முதலாளிகள் பயனடையும் வகையில் ரூ.2 லட்சத்துக்கு மேல் மட்டுமே விவசாய கடன் வழங்கும் நடைமுறையை வங்கிகள் கைவிட வேண்டும். நகைக்கடன் வழங்குவதற்கு நகையை விலைக்கு வாங்கிய ரசீதுகளை விவசாயிகளிடம் கேட்க கூடாது என்று கோஷமிட்டனர்.

 

The post நகைக்கடனுக்கான நிபந்தனை கண்டித்து வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Trichy ,State Bank ,National South Indian Rivers Link Farmers Association ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன பேருந்தில் பயங்கர தீ விபத்து!!