×

சீர்காழி அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய வெடிபொருளை செயல் இழக்க செய்த நிபுணர்கள்

*பலத்த சத்தத்துடன் வெடித்ததால் பரபரப்பு

சீர்காழி : சீர்காழி அருகே கடற்கரையில் கரைஒதுங்கிய வெடிபொருளை நிபுணர்கள் செயல் இழக்க செய்தனர். பலத்த சத்தத்துடன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாயக்கர்குப்பம் கடற்கரையில் கடந்த 12ம்தேதி அதிகாலை மர்மபொருள் ஒன்று கரை ஒதுங்கியது.

கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த மர்ம பொருளை கைப்பற்றி ஆய்வு செய்ததில், மர்ம பொருளில் டேஞ்சர் என எழுதப்பட்டு இருந்ததும், ஒன்றரை அடி நீளம் கொண்டதும், 6 இன்ச் விட்டம் கொண்டதும், போர் கப்பலில் பயன்படுத்தக்கூடிய வெடிபொருள் என தெரிய வந்தது. கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் பாதுகாப்பான இடத்தில் புதைத்து மண்மூட்டைகள் போட்டு மூடி வைக்கப்பட்டன.

இந்நிலையில் சென்னையில் இருந்து வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர் பிரிவு இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று சீர்காழி வந்தனர். பின்னர் அவர்கள், நாகை கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், பூம்புகார் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சேதுபதி, பூம்புகார் தீயணைப்பு நிலைய அலுவலர் துரைமுருகன் ஆகியோருடன் நாயக்கர் குப்பத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள், நாயக்கர் குப்பத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த அந்த வெடிபொருளை பாதுகாப்புடன் செயலிழக்க வைத்தனர். இதில் செயல் இழக்க செய்யப்பட்ட வெடிபொருள் பலத்த சத்தத்துடன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

The post சீர்காழி அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய வெடிபொருளை செயல் இழக்க செய்த நிபுணர்கள் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Mayiladuthurai district ,Nayakarkuppam beach ,Dinakaran ,
× RELATED சீர்காழியில் தமிழ்நாடு ஊரக...