×

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 17 மாதமாக சிறையில் இருந்த டெல்லி மாஜி துணை முதல்வருக்கு ஜாமீன்: சுப்ரீம்கோர்ட் அதிரடி; அமலாக்கத் துறைக்கு கண்டிப்பு

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 17 மாதமாக சிறையில் இருந்த டெல்லி மாஜி துணை முதல்வருக்கு ஜாமீன் வழங்கிய சுப்ரீம்கோர்ட், அமலாக்கத் துறையை கண்டித்துள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் ஆம்ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கடந்தாண்டு பிப். 26ம் தேதி கைது செய்தது. தொடர்ந்து கடந்த மார்ச் 9 அன்று பணமோசடி வழக்கில் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்தது. மேலும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளான கே.கவிதா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும், தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ளனர். இதற்கிடையே ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் இருந்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ெடல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் மணீஷ் சிசோடியா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா மீண்டும் மேல்முறையீடு செய்தார். ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு ெடல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர் விசாரணைக்கு பின், மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் கடந்த மே மாதம் தள்ளுபடி செய்யப்பட்டன.

அதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதைப் பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர், கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர். இவ்வழக்கில் விசாரணை அமைப்புகள் 400க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற்றன. இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வு அளித்த தீர்ப்பில், ‘நீதியை எந்த விதத்திலும் நாங்கள் தவறாக வழிநடத்த முடியாது. பணமோசடி சட்ட விதிகளை விரிவாக ஆய்வு செய்தோம். அதில் நீண்ட நாட்கள் சிறைவாசம் இருப்பவர்களுக்கு தளர்வு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணமோசடி வழக்கின் சட்டப்பிரிவு 45-ஐ மட்டும் வைத்துக் கொண்டு, இவ்வழக்கை அமலாக்கத்துறை தாமதப்படுத்தி உள்ளது. விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களும் ஜாமீன் தொடர்பான வழக்கு விசாரணையை தாமதப்படுத்தி உள்ளன. சட்டவிதிகளை மறந்து செயல்பட்டுள்ளன. இவை விசாரணையின் போதே ெதளிவாகிறது. நம்பகமற்ற நகலை தயாரிக்க 80 நாட்கள் வரை அமலாக்கத்துறை கால அவகாசம் எடுத்துள்ளது.

எனவே விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களால் மறுக்கப்பட்ட ஜாமீன் உத்தரவை ரத்து செய்கிறோம். இவ்வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். ரூ.10 லட்சத்திற்கான பிணைத் ெதாகை வழங்க வேண்டும். வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் காவல் நிலையத்தில் ஆஜராகி தான் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சாட்சியங்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது’ என்று உத்தரவிட்டனர். அப்போது குறுக்கிட்ட அமலாக்கத்துறை வழக்கறிஞர், ‘கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன கொடுத்த போது விதிக்கப்பட்ட விதிமுறைகளை போன்று இவருக்கும் விதிமுறைகளை வகுத்து பிறப்பிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை நிராகிரித்த நீதிபதிகள், ஜாமீன் கோரிய வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். இந்நிலையில் கடந்த 17 மாதங்களாக சிறையில் இருந்த மணீஷ் சிசோடியா, இன்று ஜாமீனில் திகார் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

The post மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 17 மாதமாக சிறையில் இருந்த டெல்லி மாஜி துணை முதல்வருக்கு ஜாமீன்: சுப்ரீம்கோர்ட் அதிரடி; அமலாக்கத் துறைக்கு கண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Majhi ,Supreme Court ,Enforcement ,New Delhi ,Deputy Chief ,Ahamatmi ,Delhi Majhi ,Supreme Court Action ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED குற்ற வழக்குகளில்...