×

95 வயது வரை பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைக்காக உழைத்தவர் பெரியார்: அமைச்சர் உதயநிதி பேச்சு

சென்னை: 95 வயது வரை பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைக்காக உழைத்தவர் பெரியார் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில், சமூக நீதி சார்ந்த பல்வேறு கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை இளைஞர்களிடையே பரப்பிடவும், மாநிலத்தின் எதிர்காலப் பாதையை வடிவமைக்கும் கருத்துக்களைப் பகிர்ந்து, பரிமாறிக் கொள்ளும் வகையில் நடத்தப்படும் தந்தை பெரியார் நினைவுச் சொற்பொழிவினை தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர்;

” இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக நடைபெறுகின்ற தந்தை பெரியார் நினைவு சொற்பொழிவில் வரவேற்புரையாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். பெருமை அடைகின்றேன். விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பாக எதற்காக தந்தை பெரியார் நினைவு கருத்தரங்கத்தை நடத்த வேண்டும் பெரியாருக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கும் என்ன சம்மந்தம் என்று உங்களில் பல பேருக்கு அந்த சந்தேகம் இருக்கும். அந்தக்கேள்விகள் எழலாம். வாழ்வில் வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் விளையாட்டு போட்டிகளில் சாதிக்க, துடித்துக்கொண்டிருக்கக் கூடிய ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் சுறுசுறுப்பு, விடாமுயற்சி, ஒழுக்கம், துவண்டு போகாத மன உறுதி.

பகுத்தறியவேண்டிய ஆராய்ச்சி மனப்பான்மை மிகமிக அவசியம். தந்தை பெரியாரிடம் இவை அனைத்துமே அடிப்படை குணங்களாக அமைந்தது. அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி. இன்னும் சொல்லப்போனால் நேற்று தந்தை பெரியாருடைய 146வது பிறந்த நாள். நேற்று அவருடைய பிறந்த நாளை கொண்டாடிவிட்டு, இன்றைக்கு இந்த நிகழ்ச்சியை நடத்துவதில் விளையாட்டுத் துறையின் சார்பாக நாங்கள் மிகுந்த பெருமையடைகின்றோம். உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். பெரியாருடைய மரணத்தின்போது நம்முடைய முத்தமிழ் கலைஞர், பெரியார் தன்னுடைய சுற்றுப்பயணத்தை தான் முடித்துக்கொண்டு இருக்கிறார்.

அந்த சுற்றுப்பயணத்தை நாம் தொடருவோம் என்று நம்முடைய கலைஞர் எழுதியிருந்தார்கள். பெரியார் உடலால் மறைந்து இருந்தாலும், அவருடைய கருத்துக்கள் என்றைக்கும் அழியாது அப்படி என்கிறது தான் கலைஞர் அப்படி குறிப்பிட்டு சொல்லி இருந்தார். தன்னுடைய 95 வயது வரைக்கும் வாழ்ந்த பெரியார் தமிழ்நாட்டுடைய பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களுடைய உரிமைக்காக உழைத்தவர். பெரியாருடைய கொள்கைகள் எந்த காலத்திற்கும் பொருந்தக் கூடியவை. குறிப்பாக இளைஞர்கள் உங்களுக்கு மிகமிக அவசியமானவை. அதனால் தான் இந்த சிறப்பான கருத்தரங்கத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பாக இன்று நாங்கள் நடத்திக் கொண்டு இருக்கின்றோம்.

இங்கு இவ்வளவு மாணவச்செல்வங்கள் அமர்ந்து இருக்கீறீர்கள் இன்னும் சொல்லப்போனால் நிறைய மகளிர் அமர்ந்து இருக்கீறீர்கள். 100 ஆண்டுக்கு முன்பு இப்படி பட்ட நிலைமை கிடையாது. இப்படி பட்ட நிலைமையை யாரும் அனுமதிக்கவும் இல்லை. குறிப்பிட்ட சிலர் தான் படிக்க வேண்டும். குறிப்பிட்ட சிலர் தான் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். மற்றவர்கள் எல்லாம் குலத்தொழிலை செய்யணும். அதாவது அப்பா அம்மா என்ன வேலை செய்கிறார்களோ அவர்கள் தாத்தா பாட்டி என்ன வேலை செய்கிறார்களோ. அதை தான் செய்யவேண்டும் அப்படி என்ற ஒரு நிலைமை இருந்தது. படித்தாலே தீட்டு அப்படி என்று சொன்னார்கள். மகளிர் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று சொன்னார்கள்.

இன்றைக்கு அந்த நிலைமை எல்லாம் மாறி இருக்கின்றது. எல்லாரும் படிக்கிறதுக்கான நிலைமை உருவாகி இருக்கின்றது. எல்லாரும் வேலைக்கு போவதற்கான நிலைமை உருவாகி இருக்கின்றது. இதற்கு என்ன காரணம் யார் இந்த மாற்றத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது இது எல்லாவற்றிக்கும் பதில் என்னவென்று பார்த்தீர்களானால் அது தான் தந்தை பெரியார். இன்னும் சொல்லப்போனால் தந்தை பெரியார் அவர்களுக்கு பெரியார் அப்படி என்ற பட்டத்தை கொடுத்ததே பெண்கள் தான். அந்த அளவுக்கு பெண்களுடைய விடுதலைக்காக போராடியவர் குரல் கொடுத்தவர் தான் நம்முடைய பெரியார் .பெரியார் பேசிய அத்தனை வடிவங்களுக்கும் செயல் வடிவம் கொடுத்தது யார் என்று பார்த்தீர்களானால், அண்ணா அவர்களும், நம்முடைய கலைஞர் அவர்களுமான திராவிட முன்னேற்றக் கழக அரசு தான்.

இன்றைக்கு அந்த பணியை நம்முடைய முதலமைச்சர் மு.கஸ்டாலின் செய்துக் கொண்டு இருக்கின்றார். சுயமரியாதைத் திருமண சட்டம் செல்லும் என்று அண்ணா சட்டம் கொண்டு வந்தார். மகளிருக்கு குடும்பத்தில் சொத்தில் சம உரிமை என்று நம்முடைய முத்தமிழ் டாக்டர் கலைஞர் அவர்கள் சட்டம் இயற்றினார்கள். காவல்துறை, ராணுவத்தில் பெண்கள் பணிக்கு வரவேண்டும் என்று பெரியார் ஆசைப்பட்டார், குரல் கொடுத்தார். இந்தியாவிலேயே முதன் முறையாக 50 வருடத்திற்கு முன்பு தமிழ்நாடு காவல் துறையில் பெண்கள் பணியாற்றலாம் அப்படிஎன்ற நிலைமை ஏற்படுத்தியவர் தான் கலைஞர். இன்றைக்கு பெண்கள் உயர்கல்வி படிக்கவேண்டும் என்று புதுமைப்பெண் திட்டம், அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி எந்த கல்லூரியில் படித்தாலும் மாதம் ரூ. 1000 அவர்களுக்கு கல்வி உதவித்தொகையை நம்முடைய முதலமைச்சர் கொடுக்கிறார்கள்.

உங்களில் பல பேருக்கு ரூ. 1000 கல்வி உதவித் தொகை வந்துகொண்டிருக்கிறது. அதேபோல் மாணவர்கள் வறுமை காரணமாக உயர் கல்வியை விட்டுவிடக் கூடாது என்று தமிழ் புதல்வன் அப்படிஎன்று ஒரு திட்டத்தை கொண்டு வந்து மாதம் ரூ. 1000 அவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை கொடுக்கப்படுகிறது. மகளிர் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்திட நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1.16 கோடி மகளிருக்கு மாத மாதம் உரிமைத் தொகையாக ரூ. 1000 வழங்கப்படுகின்றது. எல்லாரும் நல்ல வேலைக்குப் போக வேண்டுமென்று, பெரியாருடைய கனவை நனவாக்க நான் முதல்வன் என்ற ஒரு திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் துவக்கி வைத்தார்கள்.

IAS, IPS, JUDGES மாதிரியான உயர் பதவிகளுக்கு ஏழை, எளிய, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் வரவேண்டும் என்று தன்னுடைய வாழ்நாள் முழுவதும் போராடியவர் தான் தந்தை பெரியார். அதனை செயல்படுத்த வேண்டும் விதமாக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் UPSC தேர்வுகளுக்கு தயாராகின்ற மாணவர்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 7500 நிதியுதவி வழங்கி கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் முதல்நிலைத் தேர்வில் வென்றால் ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கி கொண்டு இருக்கிறார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலையை ஏற்படுத்த பெரியார் இறுதி வரை போராடினார். அது முடியாமல் போன போது, பெரியாருடைய நெஞ்சில் தைத்த முள்ளோடு புதைக்கின்றோம் என்று கலைஞர் சொன்னார்கள். பெரியாருடைய நெஞ்சில் தைத்த அந்த முள்ளை எடுக்கின்ற விதமாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகர்.

ஏன் பெண்களும் அர்ச்சகராக பணியாற்றலாம் என்கிற நிலையை ஏற்படுத்தியவர் தான் நம்முடைய திராவிட மாடல் முதலமைச்சர். பெரியார் இல்லாமல் நாம் யாரும் இல்லை அப்படி என்று அண்ணா அடிக்கடி சொல்வார்கள். கலைஞர் என்ன சொன்னார் என்றால் என்னை எத்தனையோ பெயர்களை சொல்லி புகழ்ந்தாலும் பெரியார் வழியை பின்பற்றுகின்ற நான் ஒரு மானமிகு சுயமரியாதைக்காரன் என்று சொல்லும்போது தான் எனக்கு பெருமை. எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது என்று கலைஞர் அடிக்கடி சொல்வார். பெரியார் நம்மை விட்டு பிரிந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் இன்றைக்கும் அவருடைய கருத்துக்களும் சிந்தனைகளும் இன்றைக்கும் நமக்கு relevant ஆக இருக்கின்றது. என்றைக்கும் இருக்கும். ஆகவே தான் இந்த கருத்தரங்கத்தை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

பெரியாரை பற்றிய இந்த கருத்துக்களை நம்முடைய பேச்சாளர்கள், இந்த கருத்தரங்கில் இன்னும் விரிவாக பேசி இருக்கிறார்கள். அவற்றை எல்லாம் நீங்கள் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன். இந்த சிறப்புக்குரிய கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்துள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா அவர்களையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி அவர்களையும் வருக வருக என வரவேற்று அவர்களுக்கு எனது நன்றியை நான் தெரிவித்து கொள்கின்றேன். அது போல இங்கு கருத்துரை வழங்க வந்திருக்கக் கூடிய இயக்குனர் கரு. பழனியப்பன் வந்து இருக்கிறார்கள். கரு. பழனியப்பன் பல திரைப்படங்களை இயக்கி கொண்டிருப்பவர்.

அதே போல் இப்போது திராவிட இயக்க கொள்கைகளை, பெரியாருடைய கருத்துகளை தன் பேச்சாலும், எழுத்தாலும் மக்கள் மத்தியில் இன்றும் இயக்கிக் கொண்டிருக்கிறார். பெரியாருடைய கொள்கைகளை இளைஞர்களுக்கு புரிகின்ற மாதிரி மிக எளிமையாக எடுத்து சொல்கிறவர் கரு. பழனியப்பன் இந்த மேடைக்கு மிக மிக பொருத்தமானவர் அவரையும் வருக வருக என்று வரவேற்கின்றேன். அதேபோல் திராவிடர் கழகம் நம்முடைய கழக மேடைகளிலும், தொலைக்காட்சி விவாத மேடைகளிலும், பெரியாருடைய கொள்கைகளை திராவிட இயக்க சாதனைகளை யாரும் மறுக்க முடியாத வகையில் புள்ளி விவரத்தோடு எடுத்து வைக்கின்ற தங்கை மதிவதனி உங்களோடு பேச இருக்கின்றார். அவரையும் வருக வருக என்று வரவேற்கின்றேன்.

பெரியாருடைய கருத்துகள் ஒருவருடைய வாழ்வில் எந்த உயரத்துக்கு கொண்டு செல்லும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான் தம்பி கெனித்ராஜ் அன்பு மிக மிக எளிய குடும்பத்தில் பிறந்து, கல்வி ஒன்றை மட்டுமே துணையாகக் கொண்டு, இன்றைக்கு Transient Dynamics எனும் Robotics மற்றும் AI நிறுவனத்தினுடைய தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்து இருக்கின்றார். தம்பி கெனித்ராஜ் அன்புவும் உங்களோடு பேச இருக்கின்றார். அவரையும் வருக வருக என்று நான் வரவேற்கின்றேன். தன்னுடைய கலையின் மூலமாகவும் அம்பேத்கர், பெரியாருடைய கருத்துக்களை கோடான கோடி மக்களிடம் கொண்டு சேர்க்கின்ற தம்பி தெருக்குரல் அறிவு, அவருடைய அம்பசா இசைக்குழுவின் கலைநிகழ்ச்சி இங்கே நடைபெற இருக்கின்றது. அவர்களையும் இந்த நிகழ்ச்சிக்கு வருக வருக என்று வரவேற்கின்றேன்.

அதே போல் வினாடிவினா நிகழ்ச்சியை நடத்தவுள்ள சகோதரர் ஆரூர் இலக்கியன் அவர்களையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அமைச்சர்கள் மா. சுப்பரமணியன், சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சகோதரர் கலாநிதி வீராசாமி, வணக்கத்திற்குரிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ப. சிவகுமார் (எ) தாயகம் கவி, நா. எழிலன், AMV. பிரபாகர ராஜா, RD.சேகர், இ. பரந்தாமன், துணை மேயர் மு. மகேஷ்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளையும், விளையாட்டு பல்கலைக் கழக துணைவேந்தர், சூர்யா கிருஷ்ணமூர்த்தி அவர்களையும் வருக வருக என்று வரவேற்கின்றேன்.

இங்கு சிறப்பாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்த இசைக்கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு இந்த கருத்தரங்கிற்கு வருகை தந்துள்ள நம்முடைய SDAT விடுதி மாணவர்கள் உட்பட அனைத்து மாணவ-மாணவியர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கின்றேன். வந்திருக்கக்கூடிய பத்திரிக்கை நண்பர்களையும் வருக வருக வருக என வரவேற்கிறேன். பெரியார் நினைவு கருத்தரங்கம் வெல்லட்டும். மானுடம் தழைக்கட்டும் இவ்வாறு அமைச்சர் பேசினார். சமூக நீதி சார்ந்த தந்தை பெரியார் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

The post 95 வயது வரை பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைக்காக உழைத்தவர் பெரியார்: அமைச்சர் உதயநிதி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Perya ,Minister ,Udayanidhi ,Chennai ,Peryaar ,Assistant Minister of Youth Welfare and Sport Development ,Minister of Youth Welfare and Sport Development ,Anna Centennial Library Stadium ,Koturpuram, Chennai ,Periyar ,
× RELATED எந்த சர்வதேச போட்டிகள் என்றாலும்...