×

ஆங்கிலம், இந்தியில் மட்டும் பாடம் கற்பிக்கப்பட்டு வந்த நிலையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட 22 இந்திய மொழிகளுக்கு அனுமதி

சென்னை: ‘சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட 22 இந்திய மொழிகளில் பாடம் கற்பிக்கப்படும்’ என்று சி.பி.எஸ்.இ. இயக்குனர் ஜோசப் இம்மானுவேல் அறிவுறுத்தியுள்ளார். சி.பி.எஸ்.இ., நிர்வாகத்தின் கீழ் வரும் பள்ளிகளில் இந்தி, ஆங்கில மொழிகளில் பாடங்கள் நடத்தப்படுகிறது. தொழில்நுட்பம், மருத்துவம், சட்டம், தொழில் திறன் சார்ந்த படிப்புகள் இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஆங்கில மொழியுடன் சேர்ந்து இந்திய மொழிகளிலும் கற்றல்-கற்பித்தல் செயல்முறைகளை தொடங்குவதற்கும், தேர்வுகளை நடத்துவதற்கு சிபிஎஸ்இ தயாராக உள்ளது. உயர்கல்வியில் இந்நிலை இருக்கும்போது, அதன் அடிப்படையில் பள்ளிக் கல்வியிலும் கொண்டு வர தற்போது சி.பி.எஸ்.இ., புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் கவனம் செலுத்த ஏதுவாக 22 இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்களை தயாரிப்பதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது.

மாணவர்களுக்கு பன்மொழி அறிவின் முக்கியத்துவத்தையும், அறிவாற்றல் நன்மைகளையும் வலியுறுத்தும் புதிய கல்விக் கொள்கையின்படி இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ., (கல்விகள்) இயக்குனர் ஜோசப் இம்மானுவேல், சி.பி.எஸ்.இ., நிர்வாகத்தின் கீழ் வரும் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம், இந்திய மொழிகள் மூலம் கல்வியை நடைமுறைப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மிக முக்கியமானது. 22 இந்திய மொழிகள் மூலம் புதிய பாடப்புத்தகங்களை தயாரிக்க என்.சி.இ.ஆர்.டி.க்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் 22 மொழிகளில் பாடப்புத்தகங்கள் அடுத்த கல்வியாண்டில் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும். தொழில்நுட்பம், மருத்துவம், தொழில்திறன், சட்டம் போன்ற கல்வி முறைகளில் பாடப்புத்தகங்கள் இந்திய மொழிகளில் வருகின்றன.

உயர்கல்வி துறை இந்த பணியை தொடங்கியதில் இருந்து, பள்ளிக்கல்வி அதன் அடித்தளமாக மாற வேண்டும். பயிற்று மொழி அணுகுமுறை பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை தொடர்ச்சியாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துடன் இணைந்த பள்ளிகள் இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி, இந்திய மொழிகளை பயன்படுத்துவதை கருத்தில் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், ‘பள்ளிகளில் தாய்மொழி மற்றும் இந்திய மொழிகளில் கல்வியை ஊக்குவிப்பது பாராட்டதக்கது’ என்று பதிவிட்டுள்ளார்.

The post ஆங்கிலம், இந்தியில் மட்டும் பாடம் கற்பிக்கப்பட்டு வந்த நிலையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட 22 இந்திய மொழிகளுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : CBSE ,Chennai ,C. GP ,S.S. ,Joseph Emmanuel ,
× RELATED சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் 20ம் தேதிக்கு பிறகு வெளியாகும்?