×

மின்னணு ரோந்து முறையை செயல்படுத்தும் வகையில் சென்னை காவல் நிலையங்களுக்கு ₹1.12 கோடியில் பேப்லட் கருவிகள்: கமிஷனர் சங்கர் ஜிவால் தகவல்

சென்னை: மின்னணு ரோந்து முறையை செயல்படுத்தும் வகையில்சென்னை காவல் நிலையங்களுக்கு ₹1.12 கோடியில் 450 ‘பேப்லட்’ வகையிலான மொபைல் போன்கள் அடுத்த 3 மாதங்களில் வழங்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதல்வர் சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது, காவல் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் விசாரணையின்போது விவரங்களை பதிவு ெசய்யவும், ஆடியோ மற்றும் வீடியோ பதிவு, குற்றவாளிகளின் புகைப்படங்கள், அறிக்கைகள், வழக்கு தொடர்பான கோப்புகள் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய ‘பேப்லட்’ சாதனம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அந்த திட்டத்தின்படி சென்னை மாநகர காவல்துறையில் மின்னணு ரோந்து பணிகளை அமல்படுத்துவதற்கு ரோந்து செல்லும் காவலர்களுக்கு 408 கையடக்க ‘பேப்லட்’ வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், ரோந்து பணிகளை நவீனப்படுத்த ‘ஸ்மார்ட் காவலர்’ செல்போன் செயலி மூலம் மின்னணு ரோந்து பணி முறைக்கு மாநகர காவல் எல்லையில் உள்ள 102 காவல் நிலையத்திற்கு தலா 3 பேப்லட் சாதனங்களை வழங்கினார். அப்போது, கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, லோகநாதன், தலைமையிட இணை கமிஷனர் சாமுண்டீஸ்வரி, துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேசியதாவது:
காவல்துறையை நவீனப்படுத்தும் வகையில் 102 காவல் நிலையங்களுக்கு 408 பேப்லட் கருவிகள் வழகப்பட்டுள்ளது. இந்த பேப்லட் கருவியில் உள்ள ஸ்மார்ட் காவலர் செயலி மூலம், காவலர்களின் தற்போதைய இருப்பிடம் உட்பட ரோந்து பணிகளை கண்காணிக்கவும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பது உள்பட பல்வேறு அம்சங்கள் உள்ளது. இந்த கருவி மூலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் களப்பணியாற்றும் காவலர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து காவல் நிலைய பணிகளை மிகச்சிறப்பாக செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பேரவையில் முதல்வர் அறிவித்தப்படி விரைவில் சென்னை மாநகர காவல்துறைக்கு 1 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 450 ‘பேப்லட்’ சாதனங்கள் கொள்முதல் செய்ய அனுதி வழங்கப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களில் 450 பேப்லட் வந்த உடன் ஒவ்வொரு காவல் நிலையத்துக்கு தலா 4 பேப்லட் கருவிகள் வழங்கப்படும். அதன் மூலம் நீதிமன்ற பணி, அழைப்பாணை, பிடியாணை, மருத்துவமனை பணி, புகார் மனு, காவல் விசாரணை சரிபார்ப்பு பணிகள் தொடர்பான பணிகளை பதிவு செய்து, தினசரி ஆணையிடவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கருவியில் ஆங்கிலும் மற்றும் தமிழில் வாசகங்களை படிக்கவும், டைப் செய்யவும் வசதி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post மின்னணு ரோந்து முறையை செயல்படுத்தும் வகையில் சென்னை காவல் நிலையங்களுக்கு ₹1.12 கோடியில் பேப்லட் கருவிகள்: கமிஷனர் சங்கர் ஜிவால் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Commissioner ,Shankar Jiwal ,Chennai CP ,
× RELATED சைபர் குற்றங்கள் மக்களின் கவனக்குறைவால் நடக்கிறது: டிஜிபி சங்கர் ஜிவால்