புதுடெல்லி: தேர்தலையொட்டி தேசிய, மாநில கட்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். இதற்கு தனியார் விமானங்கள், ஹெலிகாப்டர்களை தலைவர்கள் பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக ஹெலிகாப்டர்களை எந்த இடத்தில் வேண்டுமானாலும் இறக்க முடியும் என்பதால் அதன் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி வரும் மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாடு, ஆந்திரா, மே.வங்கம், உத்தரபிரதேசம் ஆகிய மாநில அரசியல் கட்சியினர் ஹெலிகாப்டர்களை அதிகம் வாடகைக்கு எடுத்துள்ளனர்.
இதுகுறித்து பிசினஸ் ஏர்கிராப்ட்ஸ் அசோசியேஷன் நிர்வாக இயக்குநர் கேப்டன் ஆர்.கே.பாலி செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, “முந்தைய பொதுதேர்தல்களுடன் ஒப்பிடும்போது தனியார் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் தேவை 30 -40% உயர்ந்துள்ளது.
ஹெலிகாப்டர்களுக்கு ஒரு மணிநேர பயன்பாடு அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் ஒற்றை இன்ஜின் ஹெலிகாப்டர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கு ரூ.1.5 லட்சம் வரையிலும், இரட்டை இன்ஜின் ஹெலிகாப்டர்களுக்கு ரூ.3.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் சிறிய ரக விமானங்களை பொறுத்தவரை ஒரு மணிநேர பயன்பாட்டுக்கு ரூ.4.5 லட்சம் முதல் ரூ.5.25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதுலயும் பாஜதான் அதிகம்
தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட 2019-20 ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளில், “2019 மக்களவை தேர்தலில் ஆளும் பாஜ விமானம், ஹெலிகாப்ட்ர்களுக்காக மொத்தம் ரூ.250 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது. அப்போது தேர்தல் பயண செலவுகளுக்காக காங்கிரஸ் ரூ.126 கோடி செலவு செய்துள்ளது. ஆனால் விமானம், ஹெலிகாப்டர் செலவுகளை காங்கிரஸ் தனியாக தெரிவிக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தேர்தலையொட்டி கெத்து காட்டும் அரசியல் கட்சிகள்; தனியார் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தேவை 40% அதிகரிப்பு appeared first on Dinakaran.