×

தேர்தலில் வாக்குப் பதிவு நடக்கும் வீடியோ, புகைப்படங்களை 45 நாளுக்கு பிறகு அழித்துவிட தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி : வாக்குப்பதிவு புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை 45 நாட்களுக்கு மட்டும் பாதுகாத்து வைத்தால் போதுமானது என்று தேர்தல் ஆணையம் புதிய விதிமுறை கொண்டு வந்துள்ளது. அண்மைக்காலமாக தேர்தல் மோசடி புகார்களுக்கு எதிராக வேட்பாளர்கள் நீதிமன்றத்தை நாடுவது அதிகரித்திருந்தது. இதன் காரணமாக தேர்தல் ஆணையம் புதிய, புதிய விதிமுறைகளை வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு தேர்தலில் பதிவாகும் சிசிடிவி காட்சிகளை வேட்பாளர்களுக்கு வழங்கத் தேவையில்லை என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

சிசிடிவி காட்சிகளை பாதுகாப்பாக வைத்திருக்க உச்சநீதிமன்றம் அப்போது உத்தரவிட்டது. இதனிடையே தேர்தலில் பதிவாகும் வீடியோ காட்சிகளை, புகைப்படங்களை 45 நாட்கள் மட்டும் மாநில தேர்தல் அதிகாரிகள் பாதுகாத்தால் போதும் என்று அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வகுக்கப்பட்ட புதிய விதிமுறைகள் கடந்த மே 30ம் தேதி அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்பு இந்த கால அளவு குறைந்தது 90 நாட்கள் என்று இருந்தது. பல்வேறு கட்ட தேர்தல்களுக்கு ஏற்ப வாக்குப்பதிவு முதல், வாக்கு எண்ணிக்கை வரையிலான வீடியோ, புகைப்பட காட்சிகள் 6 முதல் ஓராண்டு வரை பாதுகாக்கப்பட்டன. இந்த நிலையில், புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பொதுவெளியில் தவறாக பயன்படுவதால் தேர்தல் ஆணையம் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. அதன்படி, தேர்தலில் வாக்குப் பதிவு நடக்கும் வீடியோ, புகைப்படங்களை 45 நாளுக்கு பிறகு அழித்துவிட வேண்டும் என்றும் 45 நாளில் வெற்றியை எதிர்த்து வேட்பாளர்கள் வழக்கு தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட வீடியோவை அழிக்க வேண்டாம் என்றும் தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

The post தேர்தலில் வாக்குப் பதிவு நடக்கும் வீடியோ, புகைப்படங்களை 45 நாளுக்கு பிறகு அழித்துவிட தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Electoral Commission ,Delhi ,Election Commission ,
× RELATED தவெக-அதிமுக கூட்டணி அமையுமா? செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி