×

56 மாநிலங்களவை எம்பிக்கள் தேர்தல் பிப்.27ல் நடத்தப்படும்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் 56 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் 13 மாநிலங்களை சேர்ந்த 50 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி முடிவடைகிறது. மீதமுள்ள இரண்டு மாநிலங்களை சேர்ந்த 6 உறுப்பினர்கள் வருகின்ற ஏப்ரல் 3ம் தேதி ஓய்வு பெறுகிறார்கள். அதாவது உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், கர்நாடகா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவையாகும்.

குறிப்பாக இதில் ஏப்ரல் மாதத்துடன் பதவிகாலம் முடிவடைய உள்ள மாநிலங்களவை எம்.பி.க்களில் பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் 9 ஒன்றிய அமைச்சர்கள் உள்ளனர். அதில், ரயில்வே, ஐடி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் (ஒடிசா), ஐடி இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் (கர்நாடகா), குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே (மகாராஷ்டிரா) ஆகியோர் அடங்குவர். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் (மத்திய பிரதேசம்), சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா (குஜராத்) மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் (ராஜஸ்தான்) ஆகியோரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இந்த தேர்தலுக்கான அறிவிப்பு பிப்ரவரி 8ம் தேதி வெளியாகும் என்றும், பிப்ரவரி 15ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 16ம் தேதி நடைபெறும். விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 20ம் தேதி வரை தங்கள் மனுக்களை திரும்பப் பெறலாம் . இதில் தேர்தல் நடத்தப்படும் அன்றைய தினமே, அதற்கான முடிவுகளும் வெளியிடப்படும்.

The post 56 மாநிலங்களவை எம்பிக்கள் தேர்தல் பிப்.27ல் நடத்தப்படும்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : 56 ,Rajya Sabha ,Chief Election Commission ,New Delhi ,Sabha ,Parliament ,Dinakaran ,
× RELATED போலி கால் சென்டர்கள் நடத்தி ரூ.56 கோடி...