புதுக்கோட்டை: எடப்பாடி சுற்றுப்பயணத்தின்போது கூட்டத்தை சேர்க்க ஒன்றியம் வாரியாக கட்டுக்கட்டாக பணம் விநியோகம் செய்யப்படும் வீடியோ வைரலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சி பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. ஓபிஎஸ் தனி அணியாகவும், டிடிவி தனி அணியாகவும் கழன்று சென்றுவிட்ட பிறகு பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் போராடி பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி. அதே நேரம் 2021க்கு பிறகு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் என அனைத்து தேர்தலில்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்து வருகிறது. அதனால் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் முதல் முன்னணி நிர்வாகிகள் வரை அனைவரும் அதிருப்தியின் உச்சத்திற்கே சென்று சோர்வடைந்துள்ளனர். இதனால் வரும் தேர்தலில் வென்றே தீருவது என களமிறங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்… என்ற முழக்கத்தோடு ஜூலை 7ம் தேதி கோவையில் தனது சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். அதிமுகவில் எடப்பாடி மற்றும் மாஜி அமைச்சர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் அவருடைய சுற்றுப்பயணத்துக்கு செல்ல அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பவில்லை. இதனால் செல்லும் இடமெல்லாம்ல் கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காக பணத்தை கொடுத்து ஆட்கள் சேர்ப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி முதல் டெல்டா மாவட்டமான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, நேற்றுமுன்தினம் மாலை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்றார். அங்கு ஆலங்குடி, அறந்தாங்கியில் பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி, இரவு கந்தர்வகோட்டைக்கு சென்றார்.
இந்நிலையில், கந்தர்வகோட்டையில் எடப்பாடியின் கூட்டத்துக்கு ஆட்களை அழைத்து வர ஒன்றிய வாரியாக பணப்பட்டுவாட செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாயும், வண்டி வாடகைக்கு தனியாகவும் பிரித்து பிரித்து பணம் பட்டுவாடா செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் வெளியானது. ஒன்றிய செயலாளர் முதல் கிளை பிரதிநிதிவரை தாங்கள் கூட்டி வந்த ஆட்களின் எண்ணிக்கையை சொல்லி, லிஸ்ட் எழுதிக்கொடுத்து கட்டுக்கட்டாக எண்ணி பணம் வாங்கும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.
அந்த வீடியோவில், நிர்வாகிகளின் பெயர்களை அவர்களின் ஊரின் பெயரோடு அழைத்து ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து, சரியாக பணம் எண்ணி பொறுப்பாக பட்டுவாடா செய்கிறார்கள் நிர்வாகிகள். ஒரு ஒன்றியத்திற்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பணம் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சரியா இருக்காப்பா… எண்ணி வாங்கிட்டு போங்க… வண்டி வாடகை காலையில பாத்துக்கலாம்பா… முதல்ல பத்திரமா வீட்டுக்கு போங்க என கரிசனையாக கூறும் நிர்வாகிகள் ஒரு பக்கம்… மாப்ளை சீக்கரமா வாங்கிட்டு வாப்பா… வீட்டுக்கு போகனும்ல என்ற சமானிய தொண்டர்களின் அங்கலாய்ப்பு ஒரு பக்கம்.. என அந்த இடமே அல்லோகல்லோலப்படுகிறது.
46 தொகுதிகளில் எவ்வளவு கோடி விநியோகம்?
கடந்த 7ம்தேதி சுற்றுப்பயணம் தொடங்கியது முதல் இதுவரை 46 தொகுதிகளில் 15 லட்சம் மக்களை சந்தித்துள்ளதாக நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் எடப்பாடி கூறியுள்ளார். கந்தர்வகோட்டையில் வௌியான வீடியோவில் ஒரு ஒன்றியத்திற்கு ரூ.6 லட்சம் முதல் 10 லட்சம் வரை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்றால், 46 தொகுதிகளில் எத்தனை ஒன்றியங்கள்….எத்தனை கோடிகள் என சாமானிய மக்களே கணக்கு போட்டு வாயைப்பிளக்கிறார்கள். இவர்களா மக்களை காக்க போகிறார்கள்…. இவர்களா தமிழகத்தை மீட்கப் போகிறார்கள்… என சந்ேதகத்தோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள் அரசியல் விமர்சகர்கள், பொதுமக்கள்.
The post பிசுபிசுத்துப்போன சுற்றுப்பயணம்; எடப்பாடிக்கு கூட்டத்தை சேர்க்க ஒன்றியத்துக்கு ரூ.10 லட்சம் விநியோகம்: வீடியோ வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.
