×
Saravana Stores

59 கி.மீ நீளத்திற்கு குடிநீர் குழாய் பதிக்கப்படும் பேரூர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் முழுவீச்சில் கட்டுமானப்பணிகள் நடக்கிறது: ஆய்வுக்கு பின் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: ரூ,4,276 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில்,நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் பேரூரில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் கலைஞரால் 2010ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், 2010 பிப்ரவரி 23ம்தேதி நெம்மேலியில் அன்றைய துணை முதல்வரான மு.க.ஸ்டாலின் ரூ.805 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட இரண்டாவது கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இப்பணிகள் முடிக்கப்பட்டு தற்போது சுமார் 10 லட்சம் மக்கள் பயன் பெறும் வகையில் தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நெம்மேலியில் ரூ.1516 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான பணிகள் முடிக்கப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த பிப்ரவரி 24ம்தேதி அன்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கப்பட்டு 9 லட்சம் மக்கள் பயன் பெறும் வகையில் தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையின் வளர்ச்சிக்கேற்ப குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினால் 2023 ஆகஸ்ட் 21ம்தேதி சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேரூரில், ரூ.4,276 கோடியே 44 லட்சத்தில், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதன் அடிப்படையில், இந்நிலையத்தின் கட்டுமான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையத்தில், கடல்நீரை குடிநீராக்க 1150 மீட்டர் நீளத்திற்கு கடலுக்குள் குழாய்கள் பதிக்கப்படும். அத்துடன் இந்த நிலையத்திலிருந்து போரூர் வரை 59 கி.மீ நீளத்திற்கு குடிநீர் குழாய் பதிக்கப்படும்.

The post 59 கி.மீ நீளத்திற்கு குடிநீர் குழாய் பதிக்கப்படும் பேரூர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் முழுவீச்சில் கட்டுமானப்பணிகள் நடக்கிறது: ஆய்வுக்கு பின் அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.

Tags : Perur ,Minister ,KN Nehru ,Chennai ,seawater desalination plant ,Dinakaran ,
× RELATED நீரில் தவறி விழுந்தவர் சாவு