நன்றி குங்குமம் டாக்டர்
கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி
காயம் தவிர்ப்போம்! கண்ணொளி காப்போம்!
வள்ளிப் பாட்டி தன் வாழ்நாளில் பெரும் பகுதியை வயற்காடுகளில் கழித்தவர். 75 வயது ஆகியும் இன்றும் தினம் வயலுக்குச் செல்கிறார். பத்து நாட்களுக்கு முன்பாக அவரது கண்ணில் மரக்கிளையில் இருந்த குச்சி ஒன்று குத்திவிட்டது. அதை அவர் கவனிக்காமல் விட்டுவிட்டார். ஓரிரு நாட்கள் கழித்து பாட்டியைப் பார்த்தவர்கள் யாரோ “கண்ணில் ஏதோ கட்டி மாதிரித் தெரியுது” என்க, கண்ணாடியில் பார்த்த போது அவரது கருவிழியின் ஓரத்தில் மிகச் சிறிய கட்டி ஒன்று இருப்பது தெரிந்தது. அவராகவே சில சுயமருத்துவங்களைப் பார்த்திருக்கிறார்.
வள்ளிப் பாட்டி தன் வாழ்நாளில் பெரும் பகுதியை வயற்காடுகளில் கழித்தவர். 75 வயது ஆகியும் இன்றும் தினம் வயலுக்குச் செல்கிறார். பத்து நாட்களுக்கு முன்பாக அவரது கண்ணில் மரக்கிளையில் இருந்த குச்சி ஒன்று குத்திவிட்டது. அதை அவர் கவனிக்காமல் விட்டுவிட்டார். ஓரிரு நாட்கள் கழித்து பாட்டியைப் பார்த்தவர்கள் யாரோ “கண்ணில் ஏதோ கட்டி மாதிரித் தெரியுது” என்க, கண்ணாடியில் பார்த்த போது அவரது கருவிழியின் ஓரத்தில் மிகச் சிறிய கட்டி ஒன்று இருப்பது தெரிந்தது. அவராகவே சில சுயமருத்துவங்களைப் பார்த்திருக்கிறார்.
தன் பேத்தியைக் கூப்பிட்டு, \”உடம்பில் எங்கேயாவது இதே மாதிரி புடைப்பா ஏதாவது கட்டி இருந்தா ஒரு தலைமுடியை எடுத்து இறுக்கமாக கட்டிப் போட்டுட்டா நாலு அஞ்சு நாள்ல விழுந்துரும்னு சொல்லுவாங்க, நீ எனக்கு கட்டி விடுறியா?\” என்று கேட்டிருக்கிறார். பதறிப்போன பேத்தி பாட்டியைக் கடிந்து கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். கருவிழியும் வெள்ளை விழியும் சேரும் இடத்தில் குச்சி குத்தியதால் சிறிய காயம் ஏற்பட்டு கிருஷ்ணபடலத்தின் (iris) ஒரு பகுதி வெளியே வந்திருந்தது.
கிருஷ்ணபடலம் நிறைய ரத்த நாளங்களை கொண்ட கருமை நிறமான ஒரு பகுதி. ஸ்பான்ஜ் போன்று மெதுவானதும் கூட. நல்ல வேளையாக அவரது காயத்தை வெளியில் வந்த கிருஷ்ண படலம் மிகச் சரியாக மூடியிருந்தது. அதனால் கண்ணின் உள்ளே இருக்கும் அக்வஸ் திரவம் வெளியேறவில்லை.
பாட்டிக்கு ஏற்கனவே சிகிச்சை செய்யப்பட்டு லென்ஸ் வைக்கப்பட்டிருந்தது. அறுவைசிகிச்சைக்குப் பின் அவரது பார்வை தெளிவானதாக 6/9 என்ற நிலையில் இருந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, காயமடைந்து இத்தனை நாட்கள் கழித்தும் அவரது பார்வையில் குறைபாடு ஏற்படவில்லை. அதே 6/9 என்ற அளவில் இருந்தது. கண்ணின் உள்ளிருக்கும் கிருஷ்ணபடலம் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் நிலையில், இதை கவனிக்காமல் விட்டு விட்டால் அதில் தொற்று ஏற்பட்டு கண்களுக்குள்ளும் பரவக்கூடும்.
கூடவே இருமுதல், தும்முதல், பளு தூக்குதல் போன்ற காரணங்களால் இன்னும் உள்ளிருந்து கிருஷ்ணபடலத்தின் இன்னொரு பகுதியோ அல்லது அக்வஸ் திரவம், விழிப்படிக நீர்மம் போன்றவையோ வெளியேறக் கூடும். லென்ஸ் இடம் மாறவும் வாய்ப்பு இருக்கிறது. இவற்றால் பார்வை முழுவதுமாக பாதிக்க வாய்ப்பிருக்கிறது.
பாட்டியிடம் காயத்தின் தன்மையை விளக்கினேன். உடனடியாக சிறு அறுவைசிகிச்சை ஒன்றை செய்து, வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் கிருஷ்ணபடலத்தின் பகுதியை லேசாக வெட்டி நீக்கிவிட்டு ஒன்றோ அல்லது இரண்டோ தையல்கள் போட வேண்டியிருக்கும் என்றும் விளக்கினேன். பாட்டி அறுவை சிகிச்சைக்கு ஒத்துக் கொண்டார். காயமடைந்து பத்து நாட்கள் ஆகிவிட்டதால் ஆன்டிபயாட்டிக் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை ஆரம்பித்து மறுநாள் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு விட்டது.
சந்திரன் நாற்பது வயதான மனிதர். அவருக்கும் ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டிருந்தது. வள்ளிப் பாட்டிக்கு குச்சி குத்தியிருக்க, இவருக்கோ ஒரு ரப்பர் பந்தினால் காயம் ஏற்பட்டிருந்தது. பாட்டிக்கு ஏற்பட்டிருந்த காயத்தை ஒரு வகையில் penetrating injury என்று வகைப்படுத்துவோம். சந்திரனுக்கு ஏற்பட்டதை ஊமைக் காயம் (blunt injury) என்று கூறலாம். பெரும்பாலான ஊமைக் காயங்களுக்குப் பின்பாக சில பின்விளைவுகள் ஏற்படக்கூடும்.
சிலருக்குக் கண்ணைச் சுற்றியுள்ள தசைகளில் வீக்கம் ஏற்படலாம். கண்ணைச் சுற்றியுள்ள Orbit என்ற எலும்புப் பகுதி, அதன் உள்ளும் புறமுமிருக்கும் தசைகள், கொழுப்பு இவை அடியை வாங்கிக் கொண்டு கண்ணைப் பாதுகாக்கின்றன. அந்த நிலையில் கண்ணின் உட்புறமும், பார்வையும் சீராக இருக்க, இமை, கண்ணின் கீழ்புறம், மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மட்டும் வீங்கியிருக்கும். ஒரு சிலருக்கு கிருஷ்ணபடலத்தின் நடுப்பகுதியில் காயம் ஏற்பட்டு, வெளிச்சம் பட்டால் கண்மணி (pupil) சுருங்கி விரியும் தன்மை பாதிக்கப்பட்டிருக்கும். சில காயங்கள் மிகச் சிறிய விளைவுகளுடன் தாமாகவே குணமாகக் கூடியவை.
சந்திரனுக்கு ஏற்பட்ட காயம் சற்றுத் தீவிரமானது. அவருக்குக் காயம் ஏற்பட்டு மூன்று மாதங்கள் ஆகியிருந்தன. ‘‘அடி பட்டவுடன் எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை, ஒரு மாசம் கழிச்சுத்தான் பார்வை மங்க ஆரம்பிச்சுது. அந்த ஆஸ்பத்திரிக்குப் போனேன், அதுல நிறைய விலை கூடின மருந்துகளா குடுத்திருக்காங்க.. ஆனாலும் இன்னும் பார்வை வரலை. இப்ப ஏதோ ஆபரேஷனும் பண்ணணும்னு சொல்றாங்க” என்றார். அவருடைய கண்ணையும் அவர் வைத்திருக்கும் மருந்துகளையும் ஆராய்ந்ததில் அவருக்கு ஏற்பட்டிருந்தது, காயம் காரணமாக ஏற்படும் ஒருவித கண்அழுத்த நோய் (angle recession glaucoma) என்பது தெரிந்தது.
காயத்தின் காரணமாக கிருஷ்ணபடலத்தின் ஓரங்களில் அக்வஸ் திரவம் வெளியேறும் பாதைகள் பாதிக்கப்பட்டு, கண்ணின் உள்ளே அழுத்தம் (intraocular tension) அதிகரித்திருந்தது. அவருக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சை சரியானதுதான். இந்த மருந்துகளால் கண் அழுத்தம் கட்டுப்படாத பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதிருக்கலாம். ஆனால் அவருக்கு அவரது நோயின் தன்மை முழுமையாக விளக்கப்படாததால் தேவையில்லாமல் விலை கூடுதலான மருந்துகளைக் கொடுத்திருக்கிறார்கள், அனாவசியமாக அறுவைசிகிச்சை செய்யச் சொல்கிறார்கள் என்று ஆதங்கப்பட்டார். விளக்கிக் கூறியபின் புரிந்து கொண்டார்.
கண்களில் ஏற்படும் காயத்தை முறையாக மருத்துவரிடம் காண்பித்து பரிசோதனை செய்வது மிக முக்கியம். கண்களில் அடிபட்டுவிட்டது என்று என்னிடம் வரும் பத்து பேரில் ஒன்பது பேருக்கு எந்தவித சிகிச்சையும் தேவைப்படுவதில்லை. ‘நன்றாக இருக்கிறது, இனிமேல் காயம் ஏற்படாமல் கவனமாக இருங்கள்’ என்று கூறி அனுப்பும் வகையில் தான் பெரும்பாலான நோயாளிகள் இருப்பார்கள். ஆனால் அந்த பத்தாவது நபருக்கு மருத்துவ உதவி அதிகம் தேவைப்படுகிறது.சராசரியாக நூறில் ஒருவருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படுகிறது. உடனடியாக விரைந்து செயலாற்றாவிட்டால் பார்வை நிரந்தரமாகப் பறிபோகவும் வாய்ப்பு இருக்கிறது.
உறவினர் ஒருவர் எதேச்சையாகக் கடைத்தெருவுக்குச் சென்ற பொழுது அங்கு வேறு இருவருக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. அதில் ஒருவர் இன்னொருவரின் மேல் ஒரு கத்தியைத் தூக்கி வீச, அது அந்த வழியாகப் போன உறவினரின் கண்ணில் பட்டு, அவருடைய கண் பந்தில் பெரிதாக ஒரு காயம். கண்ணின் உள்ளே இருக்கும் அனைத்து உறுப்புகளும் வெளியே வந்து விட்டன. அறுவைசிகிச்சை மூலம் கண் பந்தையே அகற்றிவிட்டு பொம்மைக் கண் வைத்திருக்கிறார்கள்.
ஒரு தீபாவளி தினத்திற்கு முந்தைய நாள் கண்களில் பட்டாசு பட்டு விட்டது என்று என்னிடம் ஒரு சிறுவனை அழைத்து வந்தார்கள். அவனது கருவிழியில் சில கந்தகத் துகள்கள் ஒட்டியிருந்தன. வலி மற்றும் தொடு உணர்ச்சி இரண்டையும் மரத்துப் போகச் செய்வதற்காக local anaesthetic மருந்துகளை பயன்படுத்திவிட்டு, அந்தத் துகள்களை அவன் கண்ணில் இருந்து அகற்றினேன். துகள்கள் மேற்பரப்பில் மட்டுமே ஒட்டியிருந்தன. கண்ணின் உட்புறத்தில் எந்த பாதிப்பும் இல்லை.பட்டாசு சிறியதாக இருந்திருக்கலாம், மிதமான வேகத்துடன் வெடித்துச் சிதறியிருக்கலாம், கூடவே சிறுவனும் பட்டாசு வெடித்த இடத்தில் இருந்து ஓரளவுக்குத் தள்ளியே இருக்கலாம். அதனால் அவனுடைய பிரச்னை நொடிகளில் தீர்ந்து விட்டது.
இன்னொரு சிறுமி. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அதே போன்ற தீபாவளி நாளில் கண்ணில் பட்டாசு பட்டு விட்டது. அதனால் வலது கண்ணில் பார்வை தெரியவில்லை என்ற நிலையில் அரசு மருத்துவமனைக்கு வந்தார். கருவிழியின் நேர் பின்னால் முழுப் பகுதியிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது. பார்வை சுத்தமாக தெரியவில்லை டார்ச்சில் ஒளியைப் பாய்ச்சினால் மட்டும் உணர்ந்து கொள்ள முடிந்தது (perception of light).
கண்ணுக்கு வெகு அருகில் விரல்களை அசைத்தாலும் (hand movements) தெரியவில்லை என்றே கூறினார். அப்போது அறுவைசிகிச்சை செய்யும் வசதிகள் எங்களிடம் இல்லாததால் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். மிக எளிய அறுவைசிகிச்சையின் பின் அவருடைய கண்ணுக்குள் இருந்த ரத்தக் கசிவு சரி செய்யப்பட்டது. இரண்டு வாரங்கள் கழித்து அவர் என்னிடம் மறுபரிசோதனைக்காக வந்தபோது பார்வை முற்றிலுமாக மீண்டிருந்தது. சிறுவனுக்கு ஏற்பட்ட காயத்தை விட சிறுமிக்கு சற்றுத் தீவிரமாக இருந்ததற்கு பட்டாசு வெடித்த வேகம், பட்டாசின் தன்மை, பட்டாசிற்கும் சிறுமிக்கும் இடையிலான தூரம் இவை காரணமாக இருக்கலாம். எந்த ஒரு காயத்தின் விளைவும் அதன் விசை (force), ஆயுதம், தூரம் இவற்றைப் பொறுத்து மாறுபடும்.
முன்பு கூறிய உறவினருக்கு ஏற்பட்ட கத்திக்குத்துக் காயத்தை open globe injury என்றும், பட்டாசினால் காயம் ஏற்பட்ட சிறுவன் மற்றும் சிறுமிக்கு ஏற்பட்ட காயங்களை closed globe injuries என்றும் கூறலாம். இரண்டு நிலைகளிலும் உடனடி சிகிச்சை மிக அவசியம். உடனடி சிகிச்சை தீவிர விளைவுகளைத் தடுக்கும். அதைவிட, காயம் ஏற்படாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்வதையே தடுக்கும்!
தினமும் முட்டை சாப்பிடலாமா…
தினசரி ஒரு முட்டை உட்கொள்பவர்களுக்கு இதய நோய், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இது சம்பந்தமாக சமீபத்தில், 30 வயது முதல் 79 வயதுக்குட்பட்ட 5 லட்சம் பேரிடம் சீன ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில் தினமும் உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் இதய நோயால் ஏற்படும் இறப்பு 18 சதவீதம் வரை குறைகிறது என்று கண்டறிந்துள்ளனர்.அதுபோன்று, பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு 28 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
முட்டையில் வைட்டமின்களும், புரதங்களும் உள்ளடங்கி இருப்பதால், தினமும் ஒரு முட்டையை அவித்தோ, பொரியலாகவோ சாப்பிடுவது நல்லது. அதேசமயம், முட்டையில் கொழுப்பு சத்து அதிகம் இருப்பதால் அதனை அதிக அளவு உட்கொள்வது உடல் நலனுக்கு கேடானது. அளவுக்கு அதிகமாக முட்டையை உட்கொள்ளும்போது, அது ஜீரணமடைவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். சில சமயங்களில் சரியாக ஜீரணமாகாமல் அடிவயிற்றில் வலி ஏற்படுத்தும்.
ஜீரண மண்டலம் பாதிக்கப்படும் போது சிலருக்கு அவர்களுக்கு தெரியாமலேயே வேறு சில உணவு அழற்சி அல்லது முட்டையால் அழற்சி ஏற்படுவதும் அதிகரிக்கும். வயிறு உப்பசம் போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம். எனவே, அளவோடு முட்டையை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் என்பதையே ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்தியுள்ளன.
தொகுப்பு: ஸ்ரீ
The post கண்ணைக் கட்டிக் கொள்ளாதே! appeared first on Dinakaran.