×

மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலா பயணிகளை துரத்தும் நாய்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் தெருநாய்கள் சுற்றுலா பயணிகளை கடிக்க துரத்துவதால் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து மாமல்லபுரம் பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உலக புகழ் வாய்ந்த சுற்றுலாத்தளமான மாமல்லபுரத்தில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்கள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்து நகரம் முழுவதும் உள்ள அனைத்து தெருக்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் கண்டபடி சுற்றித்திரிந்து சுற்றுலாப் பயணிகள், மக்களை அச்சுறுத்திவருகிறது. இதில், வெறி நாய்கள் அதிகளவில் இனப்பெருக்கம் செய்துள்ளன. இதனால், பொதுமக்கள் இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்லும்போதும், சுற்றுலாப் பயணிகளை புராதன சின்னங்கள் பகுதியிலும் அச்சுறுத்திவருகின்றன.

இதில், குறிப்பாக, கடற்கரையில் தனியாகவும், கூட்டமாகவும் செல்லும் சுற்றுலாப் பயணிகளை துரத்தி, துரத்தி கடிக்கின்றன. நாய்கடியால் பாதிக்கப்படும் மக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை உள்ளது. ரூ.1,000 மற்றும் ரூ.1500 மதிப்புள்ள ஊசி மருந்து 5 நபர்களுக்கு பயன்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை அனைத்து அரசு மருத்துவமனைக்கும் வழங்கி உள்ளது. இதில், நாய் கடியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று தான் சிகிச்சை பெற முடியும். தனியார் மருத்துவமனைகளில் நாய்கடிக்கு என்று சிறப்பு மருந்து, ஊசி கிடையாது. பணத்துக்காக சில மருந்துகள் மட்டுமே அங்கு அளிக்கப்படுகின்றன.

குறிப்பாக, மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ஜூணன் தபசு, வெண்ணெய் உருண்டைப்பாறை, கிழக்கு ராஜவீதி, தெற்குமாட வீதி, திருக்கழுக்குன்றம் சாலை, கோவளம் சாலை, மேற்கு ராஜ வீதி, வடக்கு மாமல்லபுரம், வேதாசலம் நகர், கங்கை கொண்டான் மண்டபம் தெரு, மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 500க்கும் மேற்பட்ட சொரி, வெறி பிடித்த நாய்கள் ஓட்டல் கழிவுகளை தின்று அதிகளவில் சுற்றித் திரிகின்றன. எப்போதாவது ஒரு முறை நாய்களை பிடித்து சென்னையில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று கருத்தடை செய்து மீண்டும் மாமல்லபுரம் நகரப்பகுதியிலேயே கொண்டு வந்து விட்டு விடுகின்றனர்.

நாய்கள் பிடிக்கும்போது கடமைக்காக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை நாய்களே அதுவும் 50 முதல் 100 நாய்கள் மட்டுமே கருத்தடை செய்ய பிடித்து செல்லப்படுகின்றன. ஆனால், மாமல்லபுரத்தில் தற்போது சுமார் 500 தெரு நாய்கள் உலா வருகின்றன. புராதன சின்னங்களை கண்டுகளிக்க வரும் வெளிநாட்டு பயணிகளையும் தெரு நாய்கள் துரத்தி துரத்திக் கடிக்கின்றன. இதனால், சுற்றுலாப் பயணிகள் இயற்கையை ரசிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இதுவரை, 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகளை நாய்கள் கடித்துள்ளது. உள்ளூர் மக்கள் 30க்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இதனால், சுற்றுலாப்பயணிகள் தெரு நாய்களுக்கு பயந்து அங்கும், இங்குமாக ஓடுகின்றனர். மாலை நேரங்களில் கடற்கரையில் நடைபயிற்சி செய்ய வரும் உள்ளூர் மக்களையும் கூட விட்டுவைப்பதில்லை. எனவே, சுற்றுலாத்துறையும், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து கடற்கரை, புராதன சின்னங்கள் பகுதி மற்றும் பல்வேறு தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலா பயணிகளை துரத்தும் நாய்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram beach ,Mamallapuram ,
× RELATED மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்; 7 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்