புதுடெல்லி: மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீதான வன்முறையை தடுக்க தேசிய அளவிலான சட்டம் இயற்றப்பட வேண்டுமென தேசிய பணிக்குழுவுக்கு இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) வலியுறுத்தி உள்ளது. கொல்கத்தா பெண் டாக்டர் கொலையை தொடர்ந்து, மருத்துவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த அனைத்து தரப்பினருடன் ஆலோசித்து நெறிமுறைகளை வகுக்க தேசிய பணிக்குழு (என்டிஎப்) உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்குழுவுக்கு இந்திய மருத்துவ சங்கம் அனுப்பிய கடிதத்தில் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளது. கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் (வன்முறை தடுப்பு மற்றும் சொத்துகள் சேதம்) மசோதா 2019ஐ ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் இருந்தால் மட்டுமே மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீதான வன்முறையை தடுக்க முடியும்.
அப்படிப்பட்ட சட்டம் இல்லாமல், அந்தந்த மாநிலங்களுக்கென சட்டங்கள் இருப்பதால் போலீசார் அலட்சியத்துடன் செயல்பட்டு குற்றங்கள் தடுக்கப்படுவதில்லை. எனவே, மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீதான வன்முறையை தடுக்க தேசிய அளவிலான சட்டம் இயற்றப்பட வேண்டும். மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு உரிமைகள் வழங்கப்படும். இது தேசிய அளவிலான சட்டத்திலேயே சேர்க்கப்பட வேண்டும். மருத்துவமனைகளில் தங்கி பணியாற்றும் உள்ளிருப்பு மருத்துவர்களுக்கு தேவையான வசதிகள், அடிப்படை வசதிகள், பணி கட்டமைப்பு ஆகியவை மேம்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post டாக்டர்கள் மீதான வன்முறை தடுக்க தேசிய அளவில் சட்டம்: தேசிய பணிக்குழுவுக்கு ஐஎம்ஏ கடிதம் appeared first on Dinakaran.