×

சிறு தவறும் இல்லாமல் திமுக இளைஞர் அணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்ட வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: சிறு தவறும் இல்லாமல் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டோடு இளைஞர் அணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்ட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். திமுக இளைஞர் அணியின் 2வது மாநாடு வரும் 21ம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு இளைஞர் அணி மாநாட்டு பாடல் வெளியீடு நிகழ்ச்சி நேற்று சென்னை, தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. மாநில இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு மாநாட்டு பாடலை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘மாநாட்டிற்கு முதல் நாள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் ஆயிரம் வாகனங்கள் மூலம் பேரணியாக சென்று தலைவருக்கு வணக்கம் செலுத்தப்பட உள்ளது. மேலும் இளைஞர் அணியின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை தலைவர் திறக்க உள்ளார். மாநாட்டில் 11 பதிப்பகங்கள் மூலம் புத்தகம் விநியோகம் செய்யப்படவுள்ளது. மாநாடு தினத்தன்று காலை 9 மணியளவில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கொடியேற்றி வைக்க உள்ளார். தொடர்ந்து 22 பேச்சாளர்கள் 22 தலைப்புகளில் சிறப்புரை ஆற்ற உள்ளனர். சிறு தவறும் இல்லாமல் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டோடு மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்ட வேண்டும்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில், ‘‘நிதி உரிமை, கல்வி உரிமை, மொழி உரிமை, வேலைவாய்ப்பு உரிமை என ஒட்டு மொத்தமாக நம் மாநில உரிமைகளை நிலை நாட்டிடும் வகையில் நடைபெற உள்ள கழக இளைஞர் அணி மாநாட்டின் லட்சியத்தை உணர்த்தும் வகையில் மாநாட்டுப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்புக்குரிய பாடலை வெளியிட்ட பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு எங்கள் அன்பும், நன்றியும். ஜனவரி 21ம் தேதி சேலத்தில் கூடுவோம் – நம் இளைஞரணி மாநாட்டை வெல்லச் செய்வோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* மாநாட்டு சுடர் ஓட்டம்
சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையில் இருந்து இன்று காலை 7 மணிக்கு சுடர் ஓட்டம் தொடங்குகிறது. முன்னதாக அண்ணா மற்றும் கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்துகிறார். எல்.ஐ.சி. சந்திப்பு, ஸ்பென்சர் சந்திப்பு, அண்ணா மேம்பாலம், அறிவாலயம், அன்பகம், சைதாப்பேட்டை, கிண்டி கத்திபாரா, ஆலந்தூர், மீனம்பாக்கம், தாம்பரம் வழியாகச் செல்லும் மாநாட்டுச் சுடர் தொடர் ஓட்டம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாக 316 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மாநாடு நடைபெறும் சேலம் மாவட்டத்தை வரும் 20ம் தேதி பிற்பகல் 1.30 மணி அளவில் சென்றடைகின்றது.

இளைஞர் அணிச் செயலாளர் மாநாட்டுச் சுடரை, அன்று மாலை திமுக தலைவரிடம் ஒப்படைக்கிறார். மாநாட்டுச் சுடர் ஓட்டம் செல்லும் இடங்களில் எல்லாம் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா, கே.இ.பிரகாஷ், அப்­துல்­மா­லிக், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.பிரதீப் ராஜா, சி.ஆனந்த குமார் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்துள்ளனர் என திமுக இளைஞர் அணி தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சிறு தவறும் இல்லாமல் திமுக இளைஞர் அணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்ட வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK youth team ,Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,Salem ,DMK ,youth team ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் ஏற்றத்துக்கு துணை...