×

திமுக ஆட்சி காலத்தில் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்படுகிறது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தி.மு.கழக அரசு அமையும்போதெல்லாம் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ் நிலத்தின் உரிமைகளைக் காக்கத் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்த மான மறவர் மருதிருவரின் புகழ் ஓங்குக! சின்ன மருதும், பெரிய மருதும் பீரங்கிகளுக்கு முன்னால் வளரியால் வாகை சூடியவர்கள். இவர்கள் வைத்திருந்த வளரிக்கு முன்னால் பீரங்கிகள் சரியும் என்று எழுதினான் பிரிட்டிஷ் அதிகாரி கர்னல் வெல்ஷ்! இது 1801-ஆம் ஆண்டு! கழக அரசு அமைந்ததும் மருது சகோதரர்கள் சிலையைச் சென்னையில் அமைக்க 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுச் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் கைவண்ணத்தில் ‘தென்பாண்டிச் சிங்கம்’ எனக் கலை வடிவம் பெற்று, வாளுக்குவேலி வழியாகக் காலத்தால் அழியாத காவியமாக அவர்களது கதை நிலைத்திருக்கிறது. தி.மு.கழக அரசு அமையும்போதெல்லாம் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்படுகிறது. நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றைத் தேசத் தந்தை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும்! இந்த கோட்சே கூட்டத்தைத்தான் மகாகவி பாரதியார் ‘நடிப்புச் சுதேசிகள்’ எனப் பாடினார். என்று குறிப்பிட்டுள்ளார்.

The post திமுக ஆட்சி காலத்தில் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்படுகிறது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Chief Minister ,Stalin ,Chennai ,DMK government ,Freedom ,
× RELATED வீண் விளம்பரம் தேடுவதிலேயே...