×

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். திருச்செந்தூர் முருகன் கோயில், ரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருத்தணி முருகன் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், மருதமலை முருகன் கோயில் மற்றும் பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆகிய 10 கோயில்களில் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் செலவில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு தினசரி காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இதையடுத்து திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்து கோயில் பொது தரிசனப்பாதையில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பாலை வழங்கினார். இதேபோல திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று தொடங்கி வைத்தார்.

ஜூலை 7ல் கும்பாபிஷேகம் 52 தங்கும் அறைகள் திறப்பு: அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: முதல்வரின் அறிவிப்பின்படி 10 கோயில்களில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான செலவு ஆண்டுக்கு சுமார் ரூ.50 லட்சம் ஆகும். வரும் ஜூலை 7ம் தேதி திருச்செந்தூர் கோயிலில் நடக்கும் கும்பாபிஷேக விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை கும்பாபிஷேக விழா, கலைஞர் ஆட்சிக் காலத்தில் நடந்தது. தற்ேபாது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கின்றது. கும்பாபிஷேகத்திற்கு முன்பு திருக்கோயிலுக்கு கிரிப்பிரகாரப்பாதையில் இருக்கின்ற பணிகள் முழுவதுமாக நிறைவு பெறும். புதிதாக கட்டப்பட்டுள்ள 52 தங்கும் அறைகள் இந்த மாத இறுதியில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post திருச்செந்தூர் முருகன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tiruchendur Murugan Temple ,Minister ,Sekarbabu ,Tiruchendur ,Murugan Temple ,Aranganatha Swamy Temple ,Samayapuram Mariamman Temple ,Tiruvannamalai Annamalaiyar Temple ,Tiruttani ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...