புதுடெல்லி : டெல்லி சர்வதேச இந்திரகாந்தி விமான நிலையம் மற்றும் பஞ்சாபில் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் கூடுதல் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், இந்த கூடுதல் சோதனை என்பது நவம்பர் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிஸ்தான் பிரிவினையை கோருவதால், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட சீக்கியர்களுக்கான நீதி என்கிற அமைப்பின் நிறுவனரான குர்பத்வந்த் சிங் பன்னுன், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் நவம்பர் 19ஆம் தேதிக்குப் பிறகு சீக்கியர்கள் ஏர் இந்தியா விமானங்களில் பறக்க வேண்டாம் என்றும், ஆபத்து நடக்கும் என்றும் எச்சரித்து இருந்தார்.
இந்த அச்சுறுத்தல் காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி, வழக்கமான செக்கிங் மேற்கொள்ளப்படுவது மட்டுமின்றி விமானத்தில் ஏறும் இடம் அருகே பயணிகளின் உடமைகள், இரண்டாவது முறையாக சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும், இந்த நடைமுறை டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் மட்டுமின்றி பஞ்சாபில் உள்ள விமான நிலையங்களில் ஏ்ர் இந்தியா பயணிகளிடம் மேற்கொள்ளப்படும்.
இதுதவிர, தற்காலிக விமான நிலைய நுழைவு அனுமதிச் சீட்டுகளை வழங்குவதைத் தவிர, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனைய கட்டிடத்திற்கு பார்வையாளர்கள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் நவம்பர் 10ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிவில் ஏவியேசன் செக்யூரிட்டி சார்பில் சுற்றறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. எனினும், ஏர் இந்தியா தரப்பில் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. டெல்லி விமான நிலையத்தில் தற்காலிக விமான நிலைய நுழைவு அனுமதிச் சீட்டுகளைப் பொறுத்தவரை, அரசுப் பணியாளர்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
The post பயங்கரவாத அச்சுறுத்தல் எதிரொலி : டெல்லி, பஞ்சாப் விமான நிலையங்களில் சோதனை; நவம்பர் 30 வரை அமலில் இருக்கும் appeared first on Dinakaran.