×

டெல்லியில் முதன்முறையாக கூட்டம் 38 கட்சிகளுடன் பா.ஜ ஆலோசனை: பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: டெல்லியில் முதன்முறையாக 38 கட்சிகள் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 2024 மக்களவை தேர்தலில் பா.ஜவை எதிர்க்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து முதலில் பீகார் தலைநகர் பாட்னாவிலும், அடுத்தது கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலும் ஆலோசனை நடத்தி உள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு போட்டியாக முதன்முறையாக பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது.

2019 மக்களவை தேர்தலில் பா.ஜ தொடர்ந்து 2வது முறையாக வெற்றி பெற்ற பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 38 கட்சிகள் பங்கேற்றன. கூட்டணி கட்சி தலைவர்களை ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பா.ஜ பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். கூட்டத்திற்கு வந்த பிரதமர் மோடியை பா.ஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா, சிவசேனா கட்சி தலைவரும், மகாராஷ்டிரா மாநில முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாகாலாந்து முதல்வர் நெய்பியூ ரியோ, பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இந்த கூட்டம் குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டில்,’ டெல்லியில் நடைபெறும் கூட்டத்திற்கு கூட்டணி கட்சி தலைவர்கள் வந்திருப்பது அளவற்ற மகிழ்ச்சியை கொடுக்கிறது. எங்களது கூட்டணி பல்வேறு சோதனைகளை கடந்த கூட்டணி. தேசத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் கூட்டணி இது’ என்று பதிவிட்டு இருந்தார். வரவேற்பு விழா முடிந்ததும் கூட்ட அரங்கிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் இணைந்து ஆளுயர மாலை அணிவித்தனர். அதன்பின்னர் வரும் மக்களவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடந்தது. இதில் தேசியவாத காங்கிரசில் பிளவை ஏற்படுத்திய அஜித்பவார், பிரபுல் பட்டேல், சிராக் பஸ்வான், ஓபி ராஜ்பார், உபேந்திரா குஷ்வாகா, ஜிதன்ராம் மஞ்சி, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு ஆலோசனை தெரிவித்தனர்.

* தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற தலைவர்கள்
தமிழ்நாட்டில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக சார்பில் முன்னாள் எம்பி ஏ.கே. மூர்த்தி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் ஜான் பாண்டியன், புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த கிருஷ்ணசாமி, ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் பங்கேற்றனர்.

* ஓபிஎஸ், விஜயகாந்த்திற்கு அழைப்பு இல்லை
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக பிரிவு, விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

* பீகாரில் 40 தொகுதிகளும் பா.ஜ கூட்டணிக்குத்தான்: சிராக் பஸ்வான் உற்சாகம்
பா.ஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த லோக் ஜனசக்தி(ராம்விலாஸ்) கட்சி தலைவர் சிராக் பஸ்வான் கூறுகையில்,’ பாஜ தலைவர்களுடனான எனது கலந்துரையாடலின் விவரங்களைப் பற்றி நான் பேசுவது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது. ஆனால் எனது கவலைகள் பாஜவால் சாதகமாக தீர்க்கப்பட்டுள்ளன. பீகாரில் உள்ள 40 தொகுதிகளையும் பா.ஜ கூட்டணி கைப்பற்றும். எனது சித்தப்பா பராஸ் பாஸ்வான் வெற்றி பெற்ற ஹாஜிபூர் மக்களவை தொகுதியில் நான் போட்டியிடுவேன். பராஸ் எனக்கு தந்தையைப் போன்றவர்’ என்றார்.

* அமலாக்கத்துறை மூலம் வந்த 38 கட்சிகள்
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் குறித்து ஆம்ஆத்மி எம்பி ராகவ் சதா தனது டிவிட்டில்,’38 கட்சிகள் அமலாக்கத்துறை மூலம் தேசியஜனநாயக கூட்டணியிடம் கொண்டு வரப்பட்டது’ என்றார்.

The post டெல்லியில் முதன்முறையாக கூட்டம் 38 கட்சிகளுடன் பா.ஜ ஆலோசனை: பிரதமர் மோடி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,BJP ,PM Modi ,New Delhi ,National Democratic Alliance ,Modi ,Dinakaran ,
× RELATED இந்தியா தற்போது ஊழலுக்கு...