×

விவசாய சட்டங்களை மீண்டும் கொண்டு வரவேண்டும் பாஜ மேலிடம் கண்டித்ததால் மன்னிப்பு கேட்டார் கங்கனா: தனது கருத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு

சிம்லா: கடந்த 2021ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட மூன்று விவசாய சட்டங்களை திரும்ப கொண்டுவர வேண்டும் என்று கூறியதற்காக மன்னிப்பு கேட்டுள்ள பாஜ எம்பி கங்கனா ரனாவத் தனது கருத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார். இமாச்சலப்பிரதேசம் மண்டியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜ எம்பியான நடிகை கங்கனா ரனாவத் விவசாயிகளின் போராட்டங்கள் காரணமாக ரத்து செய்யப்பட்ட மூன்று விவசாய சட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றார். கங்கனாவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளும் பாஜ 3 விவசாய சட்டங்களை மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது என்பதற்கான அறிகுறி என்று காங்கிரஸ் விமர்சித்து இருந்தது. இந்நிலையில் பாஜ எம்பி கங்கனாவின் கருத்துகளை பாஜ கண்டித்தத்துடன் கட்சி கொள்கை விஷயங்களில் கருத்து தெரிவிப்பதற்கு அவருக்கு அனுமதியும், அதிகாரமும் இல்லை என்று தெளிவுபடுத்திஇருந்தது. எதிர்காலத்தில் இதுபோன்ற எந்த கருத்துகளையும் வெளியிட வேண்டாம் என்றும் கங்கனாவிற்கு பாஜ உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் தனது கருத்துக்களை வாபஸ் பெறுவதாக கங்கனா தெரிவித்துள்ளார். இது குறித்து கங்கனா தனது எக்ஸ் பதிவில்,‘‘விவசாய சட்டங்கள் குறித்த எனது கருத்துக்கள் தனிப்பட்டவை. அவை அந்த மசோதாக்கள் மீதான கட்சியின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. நான் இப்போது நடிகை மட்டுமல்ல. பாஜவின் உறுப்பினராகவும் இருக்கிறேன் என்பதையும், எனது கருத்து தனிப்பட்ட கருத்தாக இருக்கக்கூடாது, கட்சியின் நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எனது கருத்துக்கள் யாரையாவது ஏமாற்றமடைய செய்திருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் என் கருத்துகளை திரும்ப பெறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

* அரியானா தகுந்த பதிலடி கொடுக்கும்
பாஜ எம்பி கங்கனாவின் கருத்தை காங்கிரஸ் தலைவர் கார்கே கடுமையாக சாடியுள்ளார். கார்கே இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,‘‘750 விவசாயிகள் உயிர் தியாகம் செய்த பின்னரும், விவசாயிகளுக்கு எதிரான பாஜ மற்றும் பிரதமர் மோடி அரசு தாங்கள் செய்த கடுமையான குற்றத்தை உணரவில்லை. மூன்று கருப்பு சட்டங்களை மீண்டும் அமல்படுத்துவது பற்றி பேசப்படுகின்றது. இதனை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. மோடி அரசு விவசாயிகளை வாகனங்ளின் கீழ் நசுக்கியது, முள்கம்பியில் தடுத்தது, டிரோன் மூலமாக கண்ணீர்புகை குண்டு வீசியது, விவசாயிகளுக்கு எதிராக துப்பாக்கிகளை பயன்படுத்தியது உள்ளிட்டவற்றை 62 கோடி விவசாயிகள் மறக்க மாட்டார்கள். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியால் கூறப்பட்ட விவசாயிகளை அவமதிக்கும் கருத்துக்களுக்கு அரியானா உள்ளிட்ட மாநிலங்கள் தகுந்த பதிலடி கொடுக்கும்” என்றார்.

The post விவசாய சட்டங்களை மீண்டும் கொண்டு வரவேண்டும் பாஜ மேலிடம் கண்டித்ததால் மன்னிப்பு கேட்டார் கங்கனா: தனது கருத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kangana ,BJP ,Shimla ,Kangana Ranaut ,Himachal Pradesh Mandi ,Dinakaran ,
× RELATED சந்திரபாபு நாயுடு செய்த பாவத்துக்கு...