ஐதராபாத்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்தது. ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். டெல்லி தொடக்க வீரர்களாக வார்னர், பில் சால்ட் இருவரும் களமிறங்கினர். புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரில் சால்ட் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற, டெல்லி அணி அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது.
அடுத்து வார்னருடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். ஜான்சென் வீசிய 2வது ஓவரில் மார்ஷ் 4 பவுண்டரிகளை விளாசி மிரட்டினார். அவர் 25 ரன் எடுத்து (15 பந்து, 5 பவுண்டரி) நடராஜன் வேகத்தில் எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் வீசிய 8வது ஓவரில் வார்னர் (21 ரன், 20 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), சர்பராஸ் கான் (10 ரன்), அமான் ஹகிம் கான் (4 ரன்) ஆகியோர் விக்கெட்டை பறிகொடுக்க, டெல்லி அணி 62 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது.
இந்த நிலையில், மணிஷ் பாண்டே – அக்சர் படேல் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடியது. இருவரும் 6வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 69 ரன் சேர்த்தனர். மார்கண்டே வீசிய 17வது ஓவரில் அக்சர் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அசத்தினார்.
அக்சர் 34 ரன் எடுத்து (34 பந்து, 4 பவுண்டரி) புவனேஷ்வர் வேகத்தில் கிளீன் போல்டாக, மணிஷ் பாண்டே 34 ரன் எடுத்து ரன் அவுட்டானார். அடுத்து வந்த அன்ரிச் நோர்க்யா (2 ரன்), ரிபல் படேல் (5 ரன்) இருவரும் பதற்றத்துடன் ஓடி ரன் அவுட்டாகினர். டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்தது. குல்தீப் யாதவ் 4 ரன், இஷாந்த் ஷர்மா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் புவனேஷ்வர் 4 ஓவரில் 11 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். வாஷிங்டன் 3, நடராஜன் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் களமிறங்கியது.
The post டெல்லி கேப்பிடல்ஸ் திணறல் appeared first on Dinakaran.