×

ரயில்களில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த இந்திய ரயில்வே முடிவு?.. பயணிகள் அதிர்ச்சி

டெல்லி: ரயில்களில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயணிகள் ஊருக்கு செல்வதாக இருந்தாலும் சரி, தொலைதூரம் செல்வதாக இருந்தாலும் சரி, முதலில் ரயில் பயணத்தைதான் விரும்புவார்கள். ஏனென்றால் பயண களைப்பு தெரியாது. குடும்பத்தினர், உறவினர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பேசி கொண்டே ரயிலில் முன்பதிவு செய்துகொண்டு பயணிக்கவே விரும்புகின்றனர். இதேபோல் கழிவறை வசதியும் ரயில் போக்குவரத்தில் மட்டுமே இருக்கிறது.

எனினும் பண்டிகை உள்ளிட்ட காலங்களில் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்தில் இந்திய ரயில்வேயில் தட்கல் டிக்கெட் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்காமல், ஏஜெண்ட்கள் உள்ளே நுழைந்து டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்கும் சூழல் இருந்தது. இதனை தடுக்க, இந்திய அரசு, ஐஆர்சிடிசியில் போலியான கணக்குகளை கண்டறிந்து, அதனை முடக்கியது. மேலும், ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியுள்ளது. இந்நிலையில் ரரயில்களில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி ஏசி அல்லாத மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்பவர்கள் ஒரு கி.மீட்டருக்கு 1 பைசா என்ற விகிதத்தில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. உதாரணமாக 1,000 கி.மீ தூரப் பயணத்திற்கான டிக்கெட் கட்டணம் முன்பு இருந்ததை ரூ.10 அதிகரிக்கும். மறுபுறம் ஏசி வகுப்புகளுக்கும் அதாவது, ஏசி சேர் கார், ஏசி 3-டயர், 2-டயர் அல்லது முதல் வகுப்பு ஏசி என எல்லா ஏசி வகுப்புகளுக்கும் ஒரு கி.மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்படுகிறது. அதாவது 1,000 கி.மீ பயணத்திற்கு, நீங்கள் முன்பு செலுத்தியதை விட ரூ.20 அதிகமாகச் செலுத்த வேண்டும்.

வழக்கமாக இரண்டாம் வகுப்பில் பயணம் செய்பவராக இருந்தால், உங்கள் பயணம் 500 கி.மீ வரை இருந்தால், கட்டண உயர்வு இருக்காது. 500 கிமீ வரை சாதாரண வகுப்பில் பயணிப்போருக்கு ரயில் டிக்கெட் உயர்வு இல்லை. அதேநேரம் 500 கி.மீக்கு மேல் பயணிப்போருக்கு டிக்கெட் உயர்வு இருக்கும். இந்த கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

The post ரயில்களில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த இந்திய ரயில்வே முடிவு?.. பயணிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Indian Railways ,Delhi ,
× RELATED தவெக-அதிமுக கூட்டணி அமையுமா? செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி