×

நாட்டிலேயே புதுமையான முறையில் இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காண போட்டிகள்

*‘ஆடுதாம் ஆந்திரா’ தொடக்க விழாவில் துணை முதல்வர் பேச்சு

திருப்பதி : நாட்டிலேயே புதுமையான முறையில் இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காண போட்டிகள் நடத்தப்படுவதாக, ஆடுதாம் ஆந்திரா தொடக்க விழாவில் துணை முதல்வர் நாராயணசாமி பேசினார்.ஆந்திரா மாநில அரசின் ‘ஆடுதாம் ஆந்திரா’ விளையாட்டுப் போட்டிகள் திருப்பதி நேரு நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநில துணை முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு ஜோதியை வழங்கினார். மேலும் ஆடுதாம் ஆந்திரா சின்னம் மற்றும் கொடியை வெளியிட்டு அவர் பேசியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் விளையாட்டு வீரர்களை கண்டறிந்து தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இதனால் கிராம பகுதியில் உள்ள திறமை வாய்ந்த வீரர்கள் நமக்கு கிடைப்பார்கள். மாநிலத்திற்கு பெருமை சேர்ப்பார்கள். நாட்டிலேயே புதுமையான முறையில் இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது.

ஏழைகளுக்கு கல்வி அளிப்பது செல்வம் கொடுப்பதற்கு சமம். ஜாதி, மதம் பார்க்காமல் அம்மா ஒடி திட்டம் தொடங்கப்பட்டு அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி, கல்வி சீருடை உள்ளிட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் வரலாற்றில் ஏழைகளுக்கு 35 லட்சம் வீடுகள் வழங்கி, பெண்களுக்கு ஆதரவு என்ற பெயரில் கடன்களை தள்ளுபடி செய்த பெருமையும் நமது முதலமைச்சரையே சேரும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் வெங்கட் ரமணா பேசுகையில், ‘ஆடுதாம் ஆந்திரா விளையாட்டு போட்டியே மாநில வரலாற்றில் முதன்மையானது. உடல் ஆரோக்கியமாக இருந்தால், எண்ணங்கள் அளப்பரியதாக இருக்கும். இன்றைய சமூகத்தில் டிவி, செல்போன்களால் மக்கள் தொடர்பு தூரமாகி வருகிறது. கடந்த நான்கு மாதங்களாக நிர்வாகத்தில் கவனம் செலுத்திய அதிகாரிகள், விளையாட்டு நிர்வாகத்தை அவசரப்படுத்தாமல், ஆன்லைன் பதிவு, செயலக மட்டத்தில் இருந்து விழிப்புணர்வு, 2கே ரன் போன்ற திட்டங்களைத் தொடங்கி உள்ளனர்.

விளையாட்டு மைதானங்களை அடையாளம் கண்டு நிர்வாகம், நடுவர்கள் நியமனம், தரமான விளையாட்டு உபகரணங்கள், பரிசுகள், கோப்பைகள் போன்றவற்றில் அதிகாரிகள் கடுமையாக உழைத்துள்ளனர். ஏற்கனவே 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், 35 லட்சத்துக்கும் அதிகமானோர் விளையாட்டு பார்வையாளராக பதிவு செய்துள்ளனர்’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சையத் சாஹேப், சர்வதேச பேட்மிண்டன் வீராங்கனை ஜனா, விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.போட்டிகளை தொடங்கி வைத்த பிறகு துணை முதல்வர் நாராயணசாமி மற்றும் கலெக்டர் இறகுப்பந்து விளையாடினர்.

The post நாட்டிலேயே புதுமையான முறையில் இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காண போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Deputy ,Chief Minister ,Adutham Andhra' Tirupati ,
× RELATED டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்