×

மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாத 5.47 லட்சம் பேரின் சொத்துகள் ஜப்தி: அதிகாரிகள் எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு நடப்பு அரையாண்டில் சொத்து வரி செலுத்தாத 5.47 லட்சம் பேரின் சொத்துகள் ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி என்பது பிரதான வருவாயாக உள்ளது. இந்த வருவாய் மூலம், மக்களுக்கான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்புப் பணி போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

சென்னையில் 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். அவர்களிடமிருந்து அரையாண்டுக்கு ₹750 கோடி வீதம், ஆண்டுக்கு ₹1,500 கோடி வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் 1998ன் படி, சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய முதல் அரை நிதியாண்டுக்கான சொத்து வரியை செப்டம்பர் 30க்குள் செலுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

அவ்வாறு சொத்து வரி செலுத்த தவறும் சொத்து உரிமையாளர்கள் அக்டோபர் 1ம் தேதி முதல் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டும், என்று கடந்த ஜூன் மாதமே மாநகராட்சி தெரிவித்து இருந்தது. அதேபோல், கடந்த 2022-23ம் ஆண்டுக்கான சொத்து வரியை மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களுக்கு, வரித்தொகை மீது மாதத்துக்கு ஒரு சதவீதம் தனிவட்டியுடன் சேர்த்து செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதேபோல், சொத்து உரிமையாளர்கள் அக்டோபர் 1ம் தேதி முதல் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்து வரி செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில், நடப்பு அரை நிதியாண்டுக்கான சொத்து வரியை செலுத்தும்படி சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தற்போது சொத்துவரி செலுத்துவதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, முக்கிய இடங்களில், ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்து வருன்றனர். மேலும், சொத்து உரிமையாளர்கள் எளிதாக சொத்து வரியை செலுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, சொத்து வரியை, வரி வசூலிப்பாளரிடம் காசோலையாகவோ, வரைவோலையாகவோ அல்லது கடன்/பற்று அட்டை மூலமாகவோ செலுத்தலாம். மேலும், மாநகராட்சி வளாகத்திலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும், மாநகராட்சி இணையதளம் மூலமாகவும், நம்ம சென்னை செயலி மூலமாகவும் செலுத்தலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அரையாண்டுக்கான (ஏப்ரல் – செப்டம்பர்) சொத்து வரி ₹700 கோடி வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ளது. மேலும் இந்த அரையாண்டுக்காக ஏப்ரல் மாதத்திலிருந்து, நேற்றைய தினம் வரை, ₹650 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட ₹90 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அரையாண்டு முடிய இன்னும் 4 நாட்கள் மீதமுள்ள நிலையில், கடைசி 3 நாட்களில் ₹50 கோடி வரை சொத்து வரி வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ள நிலையில், இந்த அரையாண்டில் இதுவரை 5.47 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தவில்லை. எனவே, அதிகபட்சம் வரி நிலுவை வைத்துள்ள நபர்களின் பட்டியல் மாநகராட்சியின் இணையதளத்தில் அறிவிக்கப்படும். பின்னர், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, அவர்களது சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாத 5.47 லட்சம் பேரின் சொத்துகள் ஜப்தி: அதிகாரிகள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Corporation ,
× RELATED மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை...