×

சித்தூரில் மூடப்பட்ட கூட்டுறவு பால் பண்ணைக்கு சொந்தமான 28 ஏக்கர் நிலம் அமுல் நிறுவனத்திற்கு 99 ஆண்டுக்கு குத்தகை: ஆந்திரா அமைச்சரவை அனுமதி

திருமலை: அமுல் நிறுவனத்தை பயன்படுத்தி மாநில பால் கூட்டுறவு இணையங்களை கபளீகரம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள நந்தினி கூட்டுறவு பால் நிறுவனத்தை அமுல் வசம் ஒப்படைக்க அம்மாநிலத்தின் முந்தைய பாஜ அரசு முயன்றதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அண்மையில் அமுல் நிறுவனம், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்ய அமுல் திட்டமிட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்த ஒன்றிய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் சந்திரபாபு நாயுடுவின் ஹெரிடேஜ் பால் பண்ணைக்காக மூடப்பட்ட சித்தூர் கூட்டுறவு பால் பண்ணைக்கு சொந்தமான 28.35 ஏக்கர் நிலத்தை குத்தகை அடிப்படையில் 99 ஆண்டுகளுக்கு அமுல் பால் நிறுவனத்திற்கு வழங்க ஒப்புதல்அளிக்கப்பட்டது. ஆந்திரா அரசின் இந்த முடிவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பால் பண்ணைக்கு தமிழகத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மூலம பால் சப்ளை பெற அமுல் திட்டமிட்டது தற்போது அம்பலமாகி உள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்ற முடிவுகள் குறித்து ஆந்திர மாநில மக்கள் தொடர்பு துறை அமைச்சர் வேணுகோபால கிருஷ்ணா கூறுகையில், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பென்சன் உத்தரவாதம் வழக்கும் ஓய்வூதிய உறுதி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்கப்படும்’ என்றார்.

The post சித்தூரில் மூடப்பட்ட கூட்டுறவு பால் பண்ணைக்கு சொந்தமான 28 ஏக்கர் நிலம் அமுல் நிறுவனத்திற்கு 99 ஆண்டுக்கு குத்தகை: ஆந்திரா அமைச்சரவை அனுமதி appeared first on Dinakaran.

Tags : Chittoor ,Amul ,Andhra Cabinet ,Tirumala ,Union government ,Andhra Pradesh cabinet ,Dinakaran ,
× RELATED நடைபெற உள்ள பொதுத்தேர்தலில்...